பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50. வீதியில் ஒரு வினா!

ந்தக் கலகலப்பான வீதியின் ஒளிமயமான பகுதிகளில் வழக்கமாக நாள் தவறாமல் தென்படுகிற காட்சிதான் அது கிழக்கே வீதி முடிகிற இடத்தில் உயரமான கோவில் கோபுரம், தெற்குப் பக்கம் இன்றைய சமூகத்தின் கோவிலான மாபெரும் சினிமாக் கொட்டகை, இருபுறமும் கலகலப்பான கடைகள். என்னுடைய புத்தகக் கடையும் அந்த வீதியில்தான் இருந்தது. ‘கண்ணகி புத்தக நிலையம் - உயர்தரமான இலக்கிய நூல்கள் யாவும் கிடைக்கும்’ என்று வெளியே எனாமல் போர்டு மாட்டிக் கொண்டு உள்ளே ஈ ஓட்டுகிறேனே! தெரியவில்லையா? தொலைகிறது; விடுங்கள்! அதோ என் கடைக்கு எதிர்த்தாற் போல் ஒரு மிலிடரி ஓட்டல். உள்ளேயும், வெளியேயும் கூட்டம் பொங்கி வழிகிறது. ஊரெல்லாம் கேட்கும்படி இந்தி இசைத் தட்டு முழங்குகிறது. நாள் ஒன்றுக்கு எப்படியும் எழுநூறு, எண்ணுாறு ரூபாய் வியாபாரத்துக்குக் குறையாது. மிலிடரி ஒட்டல் ஐயா, மிலிடரி ஒட்டல்: ஈ ஒட்டுவதற்கு அதுவும் இலக்கியப் புத்தகக் கடையா என்ன? சுதந்தர பாரதத்தில் அறிவை வளர்த்து விட்டோம், கல்வியைக் கரை காணச் செய்து விட்டோம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்து விட்டோம். வீதி தோறும் கலைக் கோயில், வீடு தோறும் புத்தக சாலை - என்றெல்லாம் மேடையிலே நாக்கு நீட்டிப் பேசுகிற மேதாவிகளை என்னுடைய கண்ணகி புத்தக நிலையத்துக்கு மட்டும் ஒரே ஒரு நாள் வந்து உட்காரச் சொல்லுங்கள். நாலைந்து மணி நேரத்தில் சுதந்திர பாரதத்தில் என்ன வளர்ந்திருக்கிறதென்று பாடம் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறேன். என்ன முறைக்கிறீர்கள்? முறைக்காதீர் ஐயா! நான் உள்ளதைச் சொல்லுகிறவன்.

மிலிட்டரி ஒட்டலும், சலூனும், மூலைக்கு மூலை ஒலி பெருக்கிக் கடையும் தெருவுக்கு நாலு கட்சிகளும் தவிர ஒரு வெங்காயமும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. முன்னால் ஆண்கள் தாம் பிச்சைக்கு வந்து தெருவில் அலைந்து கொண்டிருந்தார்கள். இப்போது இளம் பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தெருவில் கந்தல் புடவையும், கிழிசல் துணியும், எண்ணெய் வறண்ட பரட்டைத் தலையுமாகப் பிச்சைக்கு வருகிற அளவு வளர்ந்திருக்கிறது. எந்தெந்தத் தொழிலையோ வளர்த்து விட்டதாக மேடையிலே மார் தட்டுகிறீரே பிச்சைக்காரத் தொழில் நீர் வளர்க்காமலே எத்தனை அமோகமாக வளர்ந்திருக்கிறது பார்த்தீரா? ஏன் ஐயா தலை குனிகிறீர்? குனியாதீர்! நிமிர்ந்து நின்று, ‘பாரத தேசமென்று தோள் கொட்டிப் பூரித்துப் பெருமைப் படுங்கள்!’

'உமக்கு எதற்கு ஐயா இந்த வம்பெல்லாம்? கடையைக் கவனித்துக் கொண்டு பேசாமலிரும்' என்கிறீரா?