பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி/ வீதியில் ஒரு வினா! 393

செய்யலாம்! ஆனால் இந்தக் கடைப் பக்கமாக யாராவது திரும்பிக் கவனித்தால்தானே நான் வியாபாரத்தைக் கவனிக்கலாம். வருகிற பயல்களெல்லாம், முதலில் எதிரே இருக்கிற மிலிட்டரி ஒட்டலில்தான் நுழைகிறான்.அப்புறம் பக்கத்தில் இருக்கிற சுகானந்தா பீடா ஸ்டாலில் போய் ஸ்பெஷல் பீடா வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு திரும்பிப் பாராமலே நடையைக் கட்டி விடுகிறானே, ஐயா! பேரைப் பார் பேரை, சுகானந்தா பீடாவாம். இன்று இந்த தேசத்திலே சுகமும், ஆனந்தமும் இவன் பீடா ஸ்டாலிலேதான் மீதம் இருக்கிற மாதிரி நினைப்பு. பீடாக்கடை வீராசாமி என்ன இருந்தாலும் கெட்டிக்காரன். பயல் பீடாவுக்கு வெற்றிலை சுருட்டுகிறபோது ஆளையே சுருட்டிக் கைக்குள் போட்டுக் கொள்கிற சாமர்த்தியக்காரன். எப்படியோ இவனும், தினமும் பதினைந்து, இருபது ரூபாய்க்கு வியாபாரம் பண்ணிவிடுகிறான்.

தெருவுக்கே திருஷ்டி பரிகாரம்போல், என் இலக்கியப் புத்தகக்கடைதான் இருக்கிறதே ஈயோட்டுவதற்கு இதோ மேல்வரிசையில் திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை. நூறு பிரதிகளும் அப்படியே இக்கின்றனவே. இணையற்ற இலக்கிய நூல்தான் யாராவது கேட்டு வாங்கிக் கொண்டு போகிறானா?

தப்பித் தவறி எவனாவது படியேறிக் கடைக்குள் வந்தால், “கொக்கோகம் மலிவுப் பதிப்பு இருக்குதுங்களா?” என்று வாய் கூசாமல் கேட்கிறான்.

“அதெல்லாம் இங்கே வைத்து விற்கிறது இல்லை” என்றால் முகத்தைச் சுளித்து ஒரு தினுசாகப் பார்த்துவிட்டுப் போகிறான். போகட்டுமே! கண்ணகி புத்தக நிலையத்தில் நுழைந்து நாக்குமேலே பல்லைப் போட்டு இவன் எப்படிக் கேட்கலாம் இந்தக் கேள்வியை?

ஏண்டா டேய் உன்னைப் போல் வெறும் பயல்களை நம்பியா திரு.வி.க எழுதி வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்? நீ போ! உன் வியாபாரம் வேண்டாம் தெய்வம்டா அவரு மறுபடியும் சிறிது நேரம் ஈயோட்டுகிறேன்.

அதோ, கிழிசல் பாவாடையும் பலாச்சுளைகளைக் கந்தல் துணியால் மூடினாற்போல் நடுநடுவே கந்தலின் வழி முதுகும், தோளும், பொன்னிறந் தெரிய சட்டையுமாக ஏழெட்டு வயதுச் சிறுமி பீடா ஸ்டால் வாசலில் பிச்சைக்கு நிற்கிறாள். அந்தச் சிறுமிக்குப் பக்கத்திலே சிறிது தொலைவில் அதே கந்தல் கோலத்தில் அவளை அத்தொழிலுக்கு அனுப்பியிருக்கும் அவள் தாய் இன்னொரு கைக்குழந்தையோடு ஒதுங்கி நிற்கிறாள். அவளே முன்வந்து கை நீட்டலாம்!. ஆனால் இப்போது அது "ஃபேஷன்' இல்லை. சிறு வயதாக இருந்தால்தான் பார்க்கிறவர்கள் மனம் உடனே உருகும். பிஸினஸ் ஐயா! நேரடியாகக் கவனிப்பதை விட 'சப் ஏஜண்ட்ஸ்' வைத்துக் கவனித்தால் இலாபம் அதிகம். இல்லையா? உமக்குத்தான் தெரியுமே சுகானந்தா பீடா ஸ்டால் பக்கம் வருகிற ஒவ்வொரு ஆளிடமும் அந்தச் சிறுமி பின் தொடர்ந்து ஒடிப்போய்க் கை நீட்டுகிறாள். சிரிக்கிறாள்; கெஞ்சுகிறாள். சிறுமிக்கு எலுமிச்சம்பழ நிறம் களையான முகம்! மூக்கு முழி, பல் வரிசை, எல்லாமே அழகாக வாய்த்துத்