பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வீதியில் ஒரு வினா! 395

தோற்றமளித்த ஒரு இளைஞன் உலகத்திலுள்ள ஈனத்தனமெல்லாம் சேர்த்துச் சிரிப்பதுபோல் அசிங்கமாகச் சிரித்துக்கொண்டே அந்தப் பிச்சைக்காரச் சிறுமியைப் பார்த்துக் கேட்கிறான். இப்படியும் கேட்கத் தோன்றுமா ஒரு கேள்வி? தூ மானங் கெட்ட பயல்கள்!

“இதோ பாரு பாப்பா இப்போ உனக்கு வயது பத்தாதும்மா இன்னும் அஞ்சாறு வயது கழிச்சு வா நானே காசு கொடுத்து உன்னைக் கூப்பிடுகிறேன். 'பெர்ஸானாலிட்டி இன்னும் இம்ப்ரூவ்” ஆகணும் பாரு! ஆனப்புறம் வர்ரியா தங்கம்?”

மனம் கூசாமல், வாய் கூசாமல் வீதி நிறைய ஒலிக்கும்படி இப்படிக் கேட்கிறான். சுற்றி நிற்கிறவர்கள் ஆர்ப்பாட்டமாக நகைக்கிறார்கள். பீடாக் கடைக்கார வீராசாமி இது கேட்டுச் சுகானந்தமாக இளநகை பூக்கிறான். சிறுமி விழிக்கிறாள். அவளுக்கு அவன் கேள்வி விளங்கவில்லை. தள்ளி நின்ற தாய்க்காரி வெட்கித் தலைகுனிகிறாள். அவளுக்கு விளங்குகிறது. ஆனால் பேச வாயில்லை. வக்கும் இல்லை. ஓடிவந்து இப்படிக் கேட்டவன் முகத்தில் 'தூ' என்று காறித்துப்பத் திராணியில்லை. தாயாக இருந்தும் கோழையாக நிற்கிறாள் அவள் வயிறு ஐயா! வயிறு இருக்கிறதே சிறுமிக்கு இளைஞர்களை எல்லாம் அண்ணாவாக உறவாட முடிகிறது. ஆனால்...? வீதி நிறைய அசிங்கம் பெய்த மாதிரி இந்தக் கேள்வி ஒலித்தபோதே உலகம் சர்வநாசமாகியிருக்க வேண்டும்போல் எனக்கு மனம் கிடந்து துடிக்கிறது. சிறிது நேரத்துக்கு முன் பாரத நாட்டு மாதர் திலகங்களின் முன்னுரையில் என்ன படித்தேன்? என்ன உணர்ந்தேன்? எதற்காக மெய்சிலிர்த்தேன்?

என்னுடைய புத்தகக் கடையில் மட்டுமில்லை ஐயா! வாழ்க்கையிலேயே 'பெண்ணின் பெருமை' விலை போகவில்லை. இந்த அகன்ற வீதியில் இந்த ஆபாசக் கேள்வி ஒலித்தபோது ஆண்களும் பெண்களுமாக எத்தனை தமிழ்ச் சகோதர சகோதரிகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்? அத்தனை பேர் உடம்பிலும் இரத்தம் ஒடியதா? ஐஸ்வாட்டர் ஒடியதா? யாரைக் கேட்டால் என்ன? கேள்வி எவ்வளவு ஆபாசமானது? வீதியில் வினாவ வேண்டிய வினாவா இது? நான் ஒடிப்போய் அந்தப் பயலை அறையலாம். அறைய விடுவார்களா?

என்ன வேய்? சிரிக்கிறீர்! சிரியும் ஐயா, நன்றாகச் சிரியும். ‘பாரத தேசமென்று தோள் கொட்டிச் சிரியும் வெட்கங் கெட்டநாட்டில் வேறென்ன செய்ய முடியும்?

(தாமரை, செப். 1960)