பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. வழிகள் பிரிகின்றன

“நீ போ அம்மா! மணவறையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூட்டு நேரம் நெருங்கி விட்டது. இவனைச் சமாதானப் படுத்த உன்னால் முடியாது. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மகளை அவசரப் படுத்தினார் நல்ல குற்றாலம் பிள்ளை.

புதுப் புடைவையும் பூச்சூட்டுமாக மணக் கோலத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய மகள் தயங்கினாள். கீழே விழுந்து கை கால்களை உதைத்துக் கொண்டு அழும் தம்பியைப் பார்த்துக் கலங்கி நின்றாள் மணப்பெண்.

“கண்ணா, அழாதே! நீ சமர்த்துப் பையனில்லையா? நான் இன்னும் கொஞ்ச நாழிகையிலே இங்கே வந்திடுவேன். அப்புறம் உன்னோடேயே இருப்பேன். உனக்கு எல்லாம் சொல்லுவேன். அக்காவுக்குக் கலியாணத்தன்னிக்கி நீ அழலாமா? அக்கா பாவமில்லையா?” - மணப்பெண் காந்திமதி கீழே பையனின் பக்கத்தில் உட்கார்ந்து அவனுடைய பிஞ்சுக் கைகளைப் பற்றியவாறு ஆறுதலாகச் சொல்லிப் பார்த்தாள்.

“வேண்டாம் போ; நானும் உன் கூட மணவறைக்கு வருவேன். நீ என்னை ஏமாத்திட்டுப் போகப் பார்க்கிறே. எனக்கு மட்டும் கண்ணு தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் செய்வியா அக்கா?” பையன் கதறிப் புரண்டான்.

“ஏலே குருட்டு மூதி, உதை கேக்குதா இப்பம்? நேரம் காலம் தெரியாமே அழுது முரண்டு பிடிக்கிறே!” என்று சினத்தோடு கையை ஓங்கினார், நல்ல குற்றாலம்.

“அடிக்காதீங்கப்பா, கண்ணன் நான் சொன்னால் கேட்பான். கண்ணா! நீ சமர்த்துப் பையனில்லையா? அழாமல் இருக்கணும்” என்று மறுபடியும் பையனின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கெஞ்சினாள் காந்திமதி.

“வே அத்தான், நேரங் கழிஞ்சுக்கிட்டிருக்குது; மணவறையிலே கூப்பிடுதாக...” என்று அவசரப்படுத்திக்கொண்டு வந்தார் பலவேசம்.

“பலவேசம் நீதான் இந்தப் பயலைக் கொஞ்சம் பார்த்துக்கவேன். தாலியைக் கட்டி முடிஞ்சிடட்டும்.”

“காந்தி! நீ அப்பா கூடப் போம்மா, நான் இவனைப் பார்த்துக்கிறேன்” என்று பலவேசம் எழுந்து, திமிறி ஓடாமல் பையனைப் பிடித்துக் கொண்டார். கண்ணன் வீறிட்டு அழுதான். பலவேசத்தின் இரும்புப் பிடிகளையும் தகர்த்துக் கொண்டு, “அக்கா காந்தியக்கா; என்னை விட்டிட்டுப் போகாதே; நானும் மணவறைக்கு வருவேன்” என்று வீறிட்டான்.