பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழிகள் பிரிகின்றன 397

“குருட்டுப் பயலே! நீ அங்கே போய் என்னத்தைப் பார்க்கப் போறே! அதான் பொறக்கும் போதே அவிச்சுக்கிட்டுப் பொறந்திருக்கியே? இன்னும் பார்க்க என்ன வச்சிருக்கு உனக்கு?" என்று முதுகில் இரண்டு சாத்துச் சாத்தினார் பலவேசம் பையனுடைய அழுகை நாதசுவர ஒசையிலும் மேளத்திலும் கலந்து கரைந்தது. மணவறையில் கெட்டிமேளம் முழங்கிற்று.

வீடு முழுவதும் சந்தனம் மணத்தது. பன்னீர் கமகமத்தது. தலையில் பூச்சூடிக் கொண்டிருக்கிற பலர் கூடினால் நிறைகிற ஒரு மணம் - கல்யாண மணம்- வீடெங்கும் பரவி இருந்தது. காலையிலிருந்து கொட்டுமேளம் முழங்குகிறது. விடிந்ததும் ஈயப் பாத்திரத்தில் வெந்நீர்ப் பழையதும், ஆவக்காய் ஊறுகாயும் எடுத்துக்கொண்டு, 'கண்ணா பல் விளக்கலாம், வா, பழையது எடுத்திட்டு வந்திருக்கேன்' என்று கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டுபோக வரும் காந்திமதி அக்கா வரவில்லை. கண்ணன் மாடியறையிலேயே இருந்தான். வீடு நிறையக் கூட்டமும், கோலாகலமுமாக, ஏதோ புதிதாக நடப்பதை அவன் செவிகள் உணர்ந்தன. யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். வள்ளியூரிலிருந்து பலவேசம் மாமா வந்திருக்கிறார் போலிருக்கிறது. அவருடைய குரல் கேட்கிறது.ராதாவரத்துப் பெரிய அத்தை குரலும் கேட்கிறது.ஏதோ ஒரு குதூகலத்திற்காக வீடே மணக்கிறது, மகிழ்கிறது, நிறைந்து பொலிகிறது; அவன் செவிகள் உணர்கின்றன. கண்கள் பார்க்க முடியவில்லை.

“டேய் நீ இங்கேயே இரு; எங்கேயும் நீயா எந்திரிச்சி வந்து தடுமாறி விழுந்து வைக்காதே." என்று அப்பாவந்து குரல் கொடுத்துவிட்டுப்போனார். சிறிது நேரத்தில் யாரோ ஒர் இலையில் இட்டிலி கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள்.

“இந்த இட்டிலி யாருக்கு வேணும்? காந்தி அக்கா வெந்நிப் பழையது கொண்டு வருவா. நான் பல் வெளக்கிட்டுச் சாப்பிடுவேன்” என்று இட்டிலியை ஒதுக்கித் தள்ளினான் கண்ணன். - “காந்தியக்கா இன்னிக்கி வரமாட்டா. அவளுக்குக் கலியாணம். கீழே கிணத்தடியிலே ஒரே கூட்டம் நீ கண்ணு தெரியாத பையன்-வந்து பல் விளக்குறதுக்கு முடியாது. இன்னிக்குப்பல் விளக்காட்டிப் பரவாயில்லே இட்டிலியைச் சாப்பிடு”

“நா ஒண்ணும் பல்லு வெளக்காமச் சாப்பிட மாட்டேன். அக்கா வந்து என்னையைக் கீழே விழுகாமல் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போகும்” என்று இட்டிலி கொண்டு வந்தவரை மறுத்து, அடம் பிடித்தான் சிறுவன். தன்னை வஞ்சித்து ஏமாற்றி விட்டு அந்த வீடு முழுவதும் ஏதோ ஒரு பெரிய கோலாகலத்தில் மூழ்கியிருப்பது போல் அவன் மனம் உணர்ந்து ஏங்கியது. ஏங்கி என்ன பயன்? மாடியறையில் காலையில் எந்தப் படுக்கையில் தூங்கி எழுந்திருந்தானோ அந்தப் படுக்கையிலிருந்து நகராமல் வீற்றிருந்தான் அந்தக் குருட்டுச் சிறுவன். அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் பக்கமாகக் கல்யாணத்துக்கு வந்திருந்த சில சிறு பையன்கள் ஏதோ வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக்கொண்டே போனார்கள் போலிருக்கிறது.அந்த இளங் குரல்களையும், அவற்றிலிருந்த கும்மாளத்தையும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அவன் கேட்டான். .