பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“டேய் இது யாருடா, இந்தத் தூங்கு மூஞ்சிப் பையன்? படுக்கையிலேயே கையைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்!'

"கல்யாணப் பொண்ணோட தம்பிடா பாவம், குருட்டுப் பையண்டா!.”

"குருட்டுப் பையனா? ஐயோ பாவம்!

இந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்த கண்ணனுக்கு மனத்தில் ஏதோ தைத்தது. என்னவோ குமுறியது. நெருப்பில் விழுந்த பூ மாதிரி அவனுடைய பிஞ்சு நினைவு தாங்க முடியாத ஏதோ ஒரு முரட்டு வெம்மை அவன் மனத்தைக் கசக்கிப் பிழிந்தது. அந்த வீட்டில் அப்போது ஏதோ ஒரு மகிழ்ச்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தில் கலந்து கொள்ள விடாமல் - குடை ராட்டினத்திலிருந்து கீழே தள்ளப்பட்டது போல் தன்னைப் பிரித்து விட்டதாக அவன் இளம் உள்ளம் கொதித்தது. இரைந்து அழ வேண்டும் போலிருந்தது. காற்றில் அசைகிற ரோஜா மொட்டு மாதிரி அவன் உதடுகள் துடித்தன. வாய் கோணியது. கேவிக் கேவி அழுதான்.

“ஏண்டா அழுவறே? உனக்கு என்ன வேணும்? சொல்லு” என்று அந்தப் பையன்களில் ஒருவன் பக்கத்தில் வந்து கேட்டான்.

“காந்தி அக்காவை வரச் சொல்லணும். நான் மாடியிலே இருக்கேன். காலைலேருந்து பல் வெளக்கலே, பழையது சாப்பிடலே.”

“போடா, நீ சுத்த 'லூஸ்' பையனாயிருக்கியே. உங்க அக்காவுக்குத்தான் இன்னிக்குக் கலியாணமாச்சே! அவ எப்படி உனக்குப் பல் வெளக்கிவிட வருவா?” என்று கொஞ்சம் திமிரோடேயே பதில் சொன்னான், கேட்ட பையன்.

"நீ போய்ச் சொல்லு! எல்லாம் வருவா. அக்காவுக்கு என்மேலே ரொம்பப் பிரியம்.”

அந்தப் பையன்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் அவனைக் கேலி செய்துவிட்டுப் போய் விட்டார்கள். வீடெல்லாம் கேட்கும்படி ஓவென்று கையையும் காலையும் உதறிக் கொண்டு அழுதான் கண்ணன். வீடே இரண்டு பட்டது அந்த அழுகையில்.

மணவறைக் கூடத்துக்கு நேர் மேலே மாடி ஜன்னல் பையன் அழுத குரல் கீழே அக்காவுக்குக் கேட்டது. மை தீட்டிய கண்களும், மாலையிட்ட கழுத்தும், புதுவளைகள் பொங்கும் கரங்களுமாக மணமேடையிலிருந்து எழுந்து விடுவிடுவென்று மாடிப்படி ஏறினாள் காந்திமதி.

“ஏ காந்தீ அவன் கத்தினாக் கத்தட்டும்; திருப்பூட்டு நேரம் போனால் வேளை தப்பிடும்.” என்று அவள் தந்தை நல்ல குற்றாலமும் பின் தொடர்ந்தார்.

"இதென்னடாது! பூனையை மடியிலே கட்டிக்கிட்டுச் சகுனம் பார்த்த கணக்கால்ல இருக்குது முரண்டுக்காரப் பையன்னா முன்னேற்பாடா எங்கேயாச்சும் பிரிச்சு வைக்கப்படாதோ?” என்று மணவறையில் மாப்பிள்ளைக்கு உறவினர் ஒருவர் முணுமுணுத்தார்.