பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வழிகள் பிரிகின்றன * 401

“விவரந் தெரியாத பிள்ளையாச்சே!. அங்கே சரியாக் கவனிப்பாங்களா?”

“உன் தம்பி ஒருத்தன் மட்டுந்தானா? எத்தனையோ குருட்டுப் பையங்க படிக்கிறாங்களாமே அங்கே?”

லியாணம் முடிந்த மூன்றாவது நாள் வீடே பிரயாணப் பரபரப்பில் மூழ்கியிருந்தது. காந்திமதியை அழைத்துக்கொண்டு அவள் புருஷன் வீட்டினர் புறப்படப் போகிறார்கள். அவள் புருஷன் வீட்டாருக்குத் தூத்துக்குடி கண்ணனை அழைத்துக்கொண்டு பலவேசத்தோடு பாளையங்கோட்டைக்குப் புறப்பட இருந்தார் நல்ல குற்றாலம். அப்பா அவனைப் பாளையங்கோட்டைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போவது பற்றி அவனிடமே விவரமாக எல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்தி வைத்திருந்தாள் காந்திமதி.

காந்திமதி அன்றைக்கு அதிகாலையில் எழுந்து குருட்டுத் தம்பியைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போனாள். பல் விளக்கி நன்றாகக் குளிப்பாட்டி விட்டாள். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஆசையோடு வெந்நீர்ப் பழையது பிசைந்து போட்டாள்.

“கண்ணா! இன்னிக்கி நாமெல்லாம் ரயில்லே ஏறி ஊருக்குப் போறோம். நான் எங்க வீட்டுக்காரரோடு தூத்துக்குடி போறேன். நீ அப்பாவோட பாளையங்கோட்டை போறே. சமர்த்தா இருக்கணும்; அழப்படாது. எங்கேயோ இருந்தாலும் அக்கா உன்னையே நினைச்சுக்கிட்டிருப்பேன். இந்தா, இதை உனக்கே உனக்கு வச்சுக்க." என்று முழு ஒரு ரூபாயை.அவன் கையில் வைத்து அழுத்தி விட்டுச் சட்டைப் பையில் போட்டாள். எதையோ உணர்ந்து, எதையோ இழந்து, எதற்கோ ஏங்கி நின்றான் பையன். சிறு குழந்தை போல் அவனை வாரித் தழுவிக் கொண்டாள் காந்திமதி. அந்த அணைப்பு ஆறுதலாக இருந்தது சிறுவனுக்கு. அவன் அறிந்த தாய்மை அரவணைப்பு அது ஒன்றுதான்.

"அக்கா, இனிமே நீ வரவே மாட்டியா?”

“வராமே என்னடா? நானும் எங்க வீட்டுக்காரரும் ஆடிக்கு வருவோம். அப்பாகிட்டச் சொல்லி அப்ப உன்னையும் பள்ளிக்கூடத்திலேருந்து ஊருக்குக் கூட்டியாற ஏற்பாடு செய்கிறேன்.”

“நெசம்மாச் செய்வியா அக்கா?”

"கட்டாயம் செய்வேண்டா கண்ணா!

பையன் நிம்மதியடைந்தது போல் தன் கண்களால் காணாத அந்த அக்காவுக்கு முன் தலையை ஆட்டினான். எல்லோரும் ஒரே வண்டியில் போவதென்றும் மணியாச்சியில் போய் வண்டி மாறிக்கொள்வதென்றும் ஏற்பாடாயிற்று.

யில் ஜன்னலோரமாகத் தம்பியைப் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு அமர்ந்தாள் காந்திமதி. அவளுக்கு மறுபக்கம் அவளைக் கைப்பிடித்த கணவன்

நா.பா. 1 - 26