பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / புதிய ஆயுதம் 405

சொல்லிக் கொள்கிற மாதிரி இப்போது இத்தனை வருட அனுபவம் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இருபத்தைந்து வருடமானால் வெள்ளிவிழா. நூறு வருடமானால் நூற்றாண்டு விழாவாம். ஐந்து, பத்து, பதினைந்து, போன்ற குறைவான வருடங்களுக்கு என்ன விழா கொண்டாடுவதென்று எனது ஏழை நண்பர்கள் கேட்கலாம். முறையே இரும்பு விழா, பித்தளை விழா, செம்பு விழா என்று வைத்துக் கொண்டால் போகிறது. இந்தக் கணக்குப்படி செம்பு விழா எடுக்க வேண்டிய அவ்வளவு அனுபவமுள்ள நடிகர் அவர். நாலு கார், பதினாறு வீடு, நிறையக் கையிருப்பு - இவ்வளவுமுள்ள செழிப்பான கலைஞர்.

இரண்டாவது வீட்டில் ஒரு பெரிய டாக்டர் வசித்து வருகிறார். வைத்திய சம்பந்தமாக உலகத்திலுள்ள எந்தெந்த சர்வகலாசாலைகளில் என்னென்ன பட்டங்கள் உண்டோ அவ்வளவும் வாங்கினவர். அவர் கைப்பட்டாலே நோய் பறந்துவிடும் என்கிற அளவுக்குத் திறமைசாலி.

நோயாளிகளைப் பார்த்து இன்ன நோய் என்று சொல்வதற்கே நிறையப் பணம் வாங்கிவிடுவார். டாக்டர்களுக்கும், வக்கீல்களுக்கும் இலவசத் தொண்டு செய்தால் புகழ் எங்கே வருகிறது? எவ்வளவு அதிகமாகப் 'பீஸ்' வாங்குகிறார் என்பதைக் கொண்டுதானே பெரிய டாக்டர், பெரிய வக்கீல் எல்லாம் உருவாக்கப்படுகிறார்கள்?

அந்த வகையில் இரண்டாவது வீட்டு டாக்டர் இணையற்றுத் திகழ்ந்தார். ஒரு தடவை கழுத்தில் "ஸ்டெதஸ்கோப்பை' மாட்டிக் கழற்றினால் கோட்டுப் பைக்குள் நூறு ரூபாய் சேர்ந்துவிடும். டாக்டரிடம் ஒரு பெரிய காரும், இரண்டு சிறிய கார்களும் இருந்தன. பெரிய கார் அவருக்கு சிறிய கார்களில் ஒன்று அவர் மகள் மெடிகல் காலேஜுக்குப் போகவர உபயோகப்பட்டது. மற்றொன்று திருமதி டாக்டர் லேடீஸ் கிளப்புக்கும் கடை, கண்ணி, கோயிலுக்கும் போகப் பயன்பட்டது. பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களைச் சொன்னாலே நகரிலுள்ள அத்தனை பேருக்கும் தெரிந்துவிடக்கூடிய டாக்டராக இருந்தார் அவர்.

மூன்றாவது வீடு யாருடையதென்று அதன் முன்புறமுள்ள பெயர்ப்பலகையைப் பார்த்தவுடனே உங்களுக்குத் தெரிந்துவிடும். பார்-அட்லா பெற்ற ஒரு வக்கீலுடைய வீடு அது. டாக்டருக்கு வீட்டைத் தவிர ஆஸ்பத்திரி என்று தனியாக வேறொரு கட்டிடம் இருந்ததனால் வீட்டில் போர்ட்டு மாட்டவில்லை.

வக்கீலுக்கு அப்படிக் கிடையாது. வருகிறவன் வீட்டைத் தேடித்தானே வர வேண்டும்? அதனால் பெரியதாகப் பெயர்ப்பலகை எழுதித் தொங்கவிட்டிருந்தார்.

வக்கீல் தொழிலே பலகையால் விளங்க வேண்டிய ஒன்று. அதாவது பல பேருடைய கைகளால் என்று சிலேடைப் பொருளாக வைத்துக் கொண்டாலும் சரிதான். டாக்டரைப் போலவே இவரும் பெரிய வக்கீல். இவருடைய வீட்டிலுள்ள அவ்வளவு சட்டப் புத்தங்களையும் வாரிக் கொண்டு போய்க் கொட்டினால் மெரினாவுக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவு கடலைத் தூர்த்துத்