பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கோவில் வாசலில் நின்ற கூட்டத்தைப்போல் நான்கு மடங்கு கூட்டம் இப்போது சினிமாக்கொட்டகைகளின் வாசலில் நிற்கிறது. கவிகள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், விவசாயிகள், நெசவாளிகள் எல்லோரும் பட்டினி கிடந்து திண்டாடுகிறார்கள். விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலர்தான் வசதியாக வாழ்கிறார்கள்.

"மொத்தத்தில் சூழ்நிலை திருப்திகரமாக இல்லை; அப்படித்தானே?”

“திருப்திகரமாக இல்லாததோடு பணவளம் சில இடங்களிலேயே தொடர்ந்து தேங்கிப் போய் அழுகி நாற்றமெடுக்க ஆரம்பித்துவிட்டது. போட்டி, பொறாமை, வஞ்சகம், ஏமாற்று, சுயநலம், புகழ்வேட்டை, பதவிப்பித்து, எல்லாம் எல்லாருக்கும், எல்லா ஊர்களுக்குள்ளும் அதிகரித்துவிட்டன. உலகம் இதே நிலையில் போய்க் கொண்டிருந்தால் பட்டப் பகலில் நட்ட நடுத்தெருவில் காட்டு மிருகங்களைப்போல ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்துத் தின்ன ஆரம்பித்துவிடுவான். ஒரு புதிய ஆயுதம் - உலகத்தைச் சீர்திருத்தும் ஆயுதம் வேண்டியதுதான்.

“புதிய ஆயுதம் வேண்டுமென்பதைத்தான் நானும் சொல்கிறேன். அதை எங்கே கண்டுபிடிப்பது?”

"தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், தன் வீட்டில் இல்லையே என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், உலகத்திலுள்ள ஏழைகளுக்காக நினைத்துப் பேசி, உழைக்க ஒரு மனமும், வாயும், இரண்டு கைகளும் தேவை! அந்தக் கைகள்தாம் உலகத்தைச் சீர்திருத்தும் புதிய ஆயுதம்”.

“நல்லது! ஆனால் அந்தக் கைகளை நான் எங்கே போய்த் தேடுவேன்?”

கடவுளிடமிருந்து இந்தக் கேள்வி பிறந்தவுடனே அவருடைய அந்தரங்கக் காரியதரிசி பூவுலகத்தில் பட்டணத்தில் நாகரிகம் சுழித்தோடும் அந்த அகலமான வீதியிலிருந்த முதல் ஏழு வீடுகளையும் தப்பு! தப்பு! ஆறு வீடுகளையும் ஏழாவது குடிசையையும் சுட்டிக் காட்டினார்.

"அங்கே என்ன இருக்கிறது? கடவுள் ஏமாற்றத்தோடு கேட்டார்.

"இன்றைய சமுதாய அமைப்பின் தவிர்க்க முடியாத ஏழு உறுப்பினர்கள் அந்த ஏழு வீடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஏழு பேரில் யாராவது ஒருவரிடம் உங்களுக்குத் தேவையான சமதர்ம உலகைப் படைக்கும் புதிய ஆயுதம் கிடைத்தாலும் கிடைக்கலாம். போய்த் தேடிப் பாருங்கள்.”

"ஐயோ! என்னைப் பட்டணத்துக்கா போகச் சொல்கிறாய்?" என்று பயந்து நடுங்கிக்கொண்டே கேட்டார் கடவுள்.

"ஏன் பயப்படுகிறீர்கள்? பட்டணத்திலும் நீங்கள் படைத்த மனிதர்கள்தானே வாழ்கிறார்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி,

கடவுள் வேறொருவர் காணாமல் உலகத்து உலாவும் மாய வடிவோடு புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதத்தைத் தேடிக் கொண்டு பட்டணத்துக்குப்