பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / புதிய ஆயுதம் 409

புறப்பட்டார். உயரமான ஆறு மாடி வீடுகளும் ஒரு குச்சு வீடும் இருந்த அந்த வீதிக்குள் ஆவலோடு நுழைந்தார்.

நடிகர் வீட்டுக்குள் அவர் நுழைந்தபோது, “கடவுளாம், கடவுள் சுத்த மூடநம்பிக்கை” என்று ஏதோ ஒரு சினிமா படத்திற்கான வசனத்தை நெட்டுருச்செய்து கொண்டிருந்தார். கடவுள் பயந்து போய் இந்த இடத்தில் நமக்கு வேலை இல்லை என்று ஓடிவந்துவிட்டார்.நடிகருடைய வசனத்தைக் கேட்டு அவருக்கே பயம் உண்டாகிவிட்டது. அங்கே புதிய உலகைப் படைக்கும் ஆயுதம் கிடைக்காது என்று அவருக்குத் தோன்றிவிட்டது.

இரண்டாவதாக டாக்டரின் வீட்டுக்குப் போனார். டாக்டரின் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்பைக் கண்டதும், "ஆ!, கண்டுபிடித்துவிட்டேன். புதிய உலகைப் படைக்கும் புதிய கருவி கிடைத்துவிட்டது” என்று வியப்போடு கூவினார் கடவுள்.

ஆனால் அந்தோ பரிதாபம்! அருகில் நெருங்கிப் பார்த்தபோது, உயிர் அல்லாத அந்த இரப்பர்க்குழாயில் பல உயிர்களின் மரணச்சுவடுகள் பதிந்து கிடந்தன."இதுவும் புதிய உலகைப் படைக்காது” என்று ஏமாற்றத்தோடு வெளியேறினார் கடவுள்.

மூன்றாவதாக வக்கீல் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த தடிமன் தடிமனான சட்டப்புத்தகங்களைப் பார்த்தபோது புதிய உலகத்தைப் படைக்கும் ஆயுதம் இந்தப் புத்தகங்களில் இருக்கலாம் என்று கடவுளுக்குத் தோன்றியது. ஒரு புத்தகத்தைப் பிரித்துப் படித்தார்."உயிர்களைக் கொலை செய்வது இத்தனாவது பிரிவின்படிகுற்றம்’' என்று எழுதியிருந்த பக்கத்துக்குள்ளேயே மூன்று பாச்சை, நாலு ஈ, ஒரு பல்லிக்குட்டி எல்லாம் நசுக்கப்பட்டுக் காகிதத்தில் ஒட்டிக் கொண்டிருந்தன. கடவுள் அந்தப் புத்தகத்தை வீசி எறிந்துவிட்டுக் கோபமாக வெளியேறினார்.

வியாபாரியின் வீட்டுக்குப் போனார். அவருடைய தராசு முள் நிரந்தரமாக ஒரே பக்கம் வளைந்து கிடந்தது.அவர் ஏழைகளின் இரத்தத்தைப் பன்னீராக மாற்றித் தனது காதலிமார்களுக்குப் பூசிக் கொண்டிருந்தார்.

அங்கேயும் கடவுளுக்குப் புதிய உலகம் படைக்கும் ஆயுதம் கிடைக்கவில்லை.

புரொபஸரின் மூக்குக் கண்ணாடியைப் பார்த்ததுமே கடவுளுக்கு நம்பிக்கை போய்விட்டது. "இவர் சொந்தக் கண்களால் உலகத்தைப் பார்க்கத் தெரியாதவர். புத்தகங்களைத் தெரிந்த அளவு யதார்த்த வாழ்க்கை தெரியாது. இவரிடமும் புதிய ஆயுதம் இல்லை” என்று வெளியேறினார் கடவுள்.

சர்க்கார் உத்தியோகஸ்தர் யாரோ பெரிய வியாபாரியை இரகசியமாக வரச் சொல்லி வாசல் கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்ததனால் கடவுள் அந்த வீட்டுக்குள்ளேயே போகாமல் வாசலிலேயே காறித் துப்பிவிட்டுத் திரும்பினார்.