பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்




புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதம் முதல் ஆறு வீடுகளிலும் கிடைக்கவேயில்லை. நடிகரின் கலையில், டாக்டரின் ஸ்டெதஸ்கோப்பில், வக்கீலின் சட்டப் புத்தகத்தில், வியாபாரியின் தராசில், புரொபஸரின் முக்குக் கண்ணாடியில், சர்க்கார் உத்தியோகஸ்தரின் பையில் எங்கும் அந்த ஆயுதம் கிடைக்கவே இல்லை. ஏமாற்றம் என்ற உணர்ச்சியை எந்தக் கடவுள் படைத்தாரோ அவருக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கடைசியாக அந்தக் குச்சு வீட்டின் வாசலுக்குப் போனார். இருமல் சத்தம் காதைத் துளைத்தது. உள்ளே ஒரு மெலிந்த உருவம் குனிந்து உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். மறைந்து நின்று கவனித்தார். எழுதுகிறவனுக்கு முன்னால் அவரது மனைவி வந்து நின்று கூச்சல் போட்டாள்.

"பானையில் அரிசி இல்லை, டப்பாவில் காப்பிப் பொடி இல்லை, அஞ்சறைப் பெட்டியில் கடுகு இல்லை. மணி பர்ஸில் துட்டு இல்லை.”

“பேனாவில் மை இன்னும் கொஞ்சம் இருக்கிறது” என்று நறுக்கென அவளுக்குப் பதில் கூறிவிட்டு நிமிர்ந்து பாராமலே எழுதிக் கொண்டிருந்தான் அவன்.

“என்ன எழுதுகிறீர்களாம் அப்படி?”

“ஏழைகளின் துன்பத்தைப் பற்றிக் கவி எழுதுகிறேன்!”

மறைந்திருந்த கடவுள் சிறு குழந்தைபோல உணர்ச்சி வசப்பட்டுக் கை கொட்டினார்; சிரித்தார்; துள்ளிக்குதித்தார். “கண்டுபிடித்துவிட்டேன்! புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! அது இந்த நோஞ்சான் பயலுடைய கையில் அல்லவா இருக்கிறது!” - என்று வியப்பு மேலீட்டால் கூவிக் கொண்டே சிறிது சிறிதாகக் கரைந்து நீல நிற மையாக மாறி அந்த ஏழைக் கவிஞனுடைய பேனாவுக்குள் புகுந்து கொண்டார். கவி ஆவேசம் பிடித்தவனைப் போல் ஏழைகளின் துன்பத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருந்தான். அவன் மனைவி அடுப்படியில் பசியோடு சுருண்டு விழுந்து கிடந்தாள். புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதம் வெள்ளைக் காகிதத்தைக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தது.

(தாமரை, 1960)