பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. மினிஸ்டர் வருகிறார்

வ்வளவு பெரிய பாக்கியத்தைத் தாங்கிக் கொள்ளுவதற்கு வாழவந்தான்புரம் ஒரு மேஜர் பஞ்சாயத்து ஊர் கூட அன்று மிகச் சிறிய மைனர்ப் பஞ்சாயத்து கிராமம் அது! மினிஸ்டர் வருகிறார், ஐயா மினிஸ்டர்! எங்கே? எங்கேயாவது? வாழவந்தான் புரத்துக்குத்தான்.

‘வரட்டுமே! மினிஸ்டர் என்ன பெரிய கொக்கா?’ - என்று நீர் கேட்கலாம். பழைய காலத்து மனிதர் நீர்! தேர், திருவிழா, சாமி வருவதுதான் பெரிய பாக்கியம் என்று எண்ணுகிற தலைமுறையைச் சேர்ந்தவர் நீர். இந்தக் காலத்துக்கு அரசியல்தான் ஐயா பெரிய மதம். மினிஸ்டர் வருகிறாரென்றால், அதுவே ஒரு திருவிழா, தெரிந்து கொள்ளும்! என்ன, விழிக்கிறீர் இப்படி!

வாழவந்தான் புரத்துக்கு நாளைக்கு மினிஸ்டர் வருகிறார் ஐயா, மினிஸ்டர்! அதோ பஞ்சாயத்து போர்டுத் தலைவர் நாராயண பிள்ளை நெல்லுக் குதிர் உருள்கிற மாதிரித் தெருவில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாரே! அவருக்கு எத்தனையோ ஏற்பாடுகள். மினிஸ்டர் வருகிறார் என்றால் லேசுப்பட்ட காரியமா, என்ன? மேடு பள்ளமும், சேறும் சகதியும் நிறைந்த வாழவந்தான்புரத்துத் தெருக்களெல்லாம் அவசரம் அவசரமாகச் செப்பனிடப்பட்டன. வீதியில் ஏதோ திருமணம் நடக்கப் போவது போல் புது மணல் பரப்பினார்கள். தெருவெல்லாம் மாவிலைத் தோரணம், கொடிகளின் தோரணம் ஆகிய அலங்கார எற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பத்தடித் தொலைவுக்கு ஒன்று வீதம் பிரம்மாண்டமான ஆர்ச் வளைவுகள் ‘மினிஸ்டரை’ வரவேற்க நின்றன. ‘தன்னலங் கருதாத் தலைவரே வருக’ ‘சிந்தனைச் செல்வரே வருக’ ‘மக்கள் தொண்டரே வருக’ என்று இவ்வாறு ‘லோக்கல் பெயின்டர்’ பரமசிவத்தின் இலக்கிய ஞானத்தில் உருவான நாலைந்து வரவேற்பு வாக்கியங்கள் நடுத்தெருவில் பல்லிளித்துக் கொண்டிருந்தன.ஆம்! நடுத் தெருவில் தான்.

கனம் மினிஸ்டர் வருகிற வரை அந்தப் பாதையில் நுழைந்து வருகிற கழுதை கூட அந்த வரவேற்பைத் தனக்கென்று எடுத்துக் கொள்ளலாம். வாழவந்தான் புரத்தில் இருந்த ஒரே ஒரு சிறிய பூக்கடையில் முதல் நாளிலிருந்தே பூவுக்குக் கிராக்கி எற்பட்டு விட்டது. பஞ்சாயத்து போர்டுத் தலைவரிலிருந்து பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் கள் வரை மினிஸ்டருக்குப் போட மாலைகள் வாங்கினார்கள். இன்னும் பிரமுகர்கள், ஏதோ ஒரு விதத்தில் மினிஸ்டருக்கு வேண்டியவர்கள், ‘மினிஸ்டருக்கு மாலை போட்டுவிட்டு வந்தேன்’ என்று பின்னால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டவர்கள்-எல்லாருமே பூக்கடையில் முற்றுகையிட்டு விட்டால், பூ எப்படி மீதமிருக்கும்! பூக்கடை என்று பேர் சொல்லி மணக்க ஒரு பூக்கூட மீதமில்லை அங்கே,