பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தன் பேத்தி பெரிதாகிச் சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்த சன்னாசிப படையாச்சியும், பெண்ணுக்குப் பூச்சூட்டு ஏற்பாடு செய்திருந்த சீமாவையரும், பூக்கடைக்குப் பூ வாங்க வந்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பும்போது தங்களுக்குள் மினிஸ்டரை ஒரு பாட்டம் திட்டிக் கொண்டு போனார்கள்.

‘ஐயரே! இந்த 'மினிஸ்டன்' இன்னிக்குப் பார்த்தா வந்து தொலைக்கணும். ஊர்லே ஒரு நல்லது கெட்டதுக்குப் பூ இல்லாமலே எல்லாயிழவும் மாலை மாலைன்னு கொண்டு போயிடறாங்களே?”

படையாச்சிக்கு இருந்த கோபத்தில் 'மினிஸ்டர்’ என்பதை அப்படியே சொன்னால் மரியாதை வந்துவிடும் என்று கருதி மினிஸ்டன்’ என்று ஆக்கி மரியாதையைக் குறைத்து அச் சொல்லைப் பிரயோகம் செய்தார்.

"இறைந்து பேசாதீர் ஐயா! உம்மை எவனாவது திட்டப் போகிறான்! முதல் தடவையாக வாழவந்தான்புரத்துக்கு மினிஸ்டர் வருகிறார்.” என்ற சீமாவையரை இடைமறித்து,

“அதுதானே? மழைகூட இனிமே நின்னுப்பிடும்! மினிஸ்டர் வந்திடுறாரில்லே?" என்று கிண்டலில் இறங்கினார் படையாச்சி.

அப்புறமென்ன? பூ இல்லாமலே ஐயர் வீட்டில் பூச்சூட்டு நடந்தது. கண்ணுக்குக் கண்ணான அருமைப்பேத்திக்கு ஒருச்சாண் பூக்கூட வைக்க முடியாமல் பூப்புச் சடங்கு நடந்தது படையாச்சி வீட்டில்,

சும்மாவா? மினிஸ்டர் வருகிறார் ஐயா, மினிஸ்டர் வருகிறார். முதல்நாள் இரவு பஞ்சாயத்து போர்டு கட்டிடத்தில் மினிஸ்டரை எப்படி வரவேற்பது என்பது பற்றி ஒர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஊர்ப் பிரமுகர்களும், முக்கியமான ஆட்களும், கூட்டத்துக்கு வந்தார்கள். ஊர் எல்லையில் மினிஸ்டரின் கார் நுழைகிறபோதே பூரண கும்பத்தோடு எதிர்கொண்டு வரவேற்க வேண்டும் என்றார் கோவில் குருக்கள். "பூரணகும்பம்’ என்கிற ஒர் அம்சத்தினால்தான் தாம் மினிஸ்டருக்கு மிக அருகிலே போய்ச் சில விநாடிகள் நிற்கலாம் என்பது குருக்களின் எண்ணம்.

மினிஸ்டர் பேசும் இடத்தில் கூட்டம் அதிகம் காணப்படவேண்டும் என்பதற்காகவும் மினிஸ்டருக்குப் பூக்கள் துரவி வரவேற்பதற்காகவும் பள்ளிச் சிறுவர் சிறுமியரை ஏற்பாடு செய்திருந்தார்கள். புது வாத்தியாரும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் வெயிலில் திணறினார்கள். நேரம் வளர்ந்து கொண்டே இருந்தது.

மினிஸ்டர் அவர்களும் வரவில்லை. வெயிலும் குறையவில்லை. புது வாத்தியார் மிகவும் நல்லவர்.அவர் துணிவாக ஒரு காரியம் செய்தார்.ஹெட்மாஸ்டரிடம் போய், "சார் வெயில் கொடுமை தாங்க முடியவில்லை. குழந்தைகளெல்லாம் கால் பொரிகிறதென்று நிற்கமாட்டாமல் தவிக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்டு முகத்தைச் சுளித்து, “நாம் என்ன செய்யலாம்? மினிஸ்டர் இன்னும் வரவில்லையே!” என்று பதில் சொன்னார் ஹெட்மாஸ்டர். புது வாத்தியார் மேல் ஹெட்மாஸ்டருக்கு