பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மினிஸ்டர் வருகிறார் * 413

அவ்வளவாகப் பிரியம் கிடையாது. காரணம், புது வாத்தியார் இளைஞர் உயரமாகச் சிவப்பாகப் பார்க்க இலட்சணமாயிருப்பார். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்வார். அதனால் அவருக்கு மாணவ மாணவிகளிடம் ஹெட்மாஸ்டருக்கு இருந்ததைவிட அதிக மதிப்பு இருந்தது. புது வாத்தியார் மேல் ஹெட்மாஸ்டருக்குப் பொறாமை இருந்ததற்கு இதுதான் காரணம். ஹெட்மாஸ்டர் கிழடு. 'சிடுசிடு' என்று முன் கோபத்தில் எரிந்து விழுவார். பார்க்கவும் இலட்சணமாக இருக்கமாட்டார் . இதற்குள் ஒரு சிறு பெண் குழந்தை வெயில் பொறுக்க முடியாமல் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டது. புது வாத்தியார் ஒடிப்போய் ஏதோ இறவைக் கிணற்றில் மேல் துண்டை நனைத்துக் கொண்டு வந்து தண்ணீரை முகத்தில் பிழிந்து மயக்கம் தெளிவித்தார். வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மினிஸ்டருக்காகவே காய்கிற மாதிரிக் கடுமையான வெயில் தகித்தது.

பகல் மணி பன்னிரண்டு. மினிஸ்டர் இன்னும் வரவில்லை. புது வாத்தியார் மறுபடியும் ஹெட்மாஸ்டரை அணுகிக் கேட்டார். “பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் குழந்தைகள் வருகின்றன, மந்திரியைப் பார்க்க அல்ல” என்று கடுமையாகச் சொன்னார்.

“உம்மை யாரும் கேட்கவில்லை மினிஸ்டர் வருவதற்கு முன் ஒரு அடிகூட நகர முடியாது. பேசாமல் போய்க் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு நில்லும்” என்று ஹெட்மாஸ்டர் புது வாத்தியாரிடம் சீற்றத்தோடு எரிந்து விழுந்தார்.

புது வாத்தியார் துணிச்சல்காரர். அவருக்கு மட்டும் ரோஷம் வராதா, என்ன?

“நீங்கள் வேண்டுமானால் நின்று கொண்டிருங்கள். என் வகுப்புக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நான் பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன். என்னால் இந்தப் படுபாதகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.”

“நீர் அத்துமீறிப் பேசுகிறீர்! உம்மைத் தொலைத்துவிடுவேன் தொலைத்து!

'தவறு சார்!நான் அத்துமீறிப் பேசவில்லை. நியாயத்தைச் சொல்கிறேன். பச்சைக் குழந்தைகள் தண்ணீர்த் தாகத்தோடு கால் பொரிந்து கொப்புளமாகும்படி வெயிலில் நிற்கின்றன. ஆசிரியன் மந்திரியின் வேலையாள் இல்லை, குழந்தைகளின் தந்தை

“உம்முடைய தத்துவத்தை உடைப்பில் கொண்டு போய்ப் போடும்.”

“கோபித்துக் கொண்டு பயனில்லை சார்! நாம் படிப்புச் சொல்லிக் கொடுக்கத்தான் இந்தக் குழந்தைகளை வரவழைக்கிறோம். மந்திரிக்குக் கூட்டம் வரவில்லையே என்பதற்காக இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு அல்ல!

ஹெட்மாஸ்டர் புது வாத்தியாரை எரித்துவிடுவது போல் முறைத்துப் பார்த்தார்.

புது வாத்தியார் பயப்படவில்லை.பையன்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்குப் போய் விவரத்தைச் சொல்லிப் பள்ளிக்கூடத்துக்குத் திரும்புமாறு அழைத்தார். தன்னுடைய கிளாஸ் பிள்ளைகளை மட்டும்தான் அவர் கூப்பிட்டார். ஆனால்