பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54. உண்மைக்கு ஒரு நிமிஷம்

‘திடீரென்று காலமே முடமாகி இயக்கமற்றுப் போய் விட்டதா? சுற்றி இருக்கிற எல்லாரும், எல்லாமும், அலட்சியமாக, மந்தமாக மெல்லவும், சுறுசுறுப்பின்றியும் இயங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறதே. குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இந்த அறையில் கூட என் உடம்பிலும் நெஞ்சிலும், ஏன் இப்படி வெம்மை கனல்கிறது? சேசே! இப்படி எதனாலும் சமாளிக்க முடியாத ஒரு வறட்சி இதற்கு முன் ஏற்பட்டதே இல்லை. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் “திருமகள் புரொடக்ஷன்ஸில்’ இப்படி ஒரு பொருளாதார முட்டுப்பாடு வந்ததே கிடையாது. பொய்யோ, புரட்டோ, எதையாவது சொல்லி, எதையாவது செய்து பணம், எவ்வளவு பெரிய தொகையானாலும் தயார் செய்த சாமர்த்தியம் இன்று பலிக்க வில்லையே!’

உள்ளத்தில் எள்ளத்தனை இடத்திலும் நிம்மதியில்லாமல், இந்தக் கழிவிரக்க நினைவுகள் புரள இன்னும் சிறிது நேரத்தில் டெலிபோனிலும் நேரிலும் வந்து விரட்டப் போகிறவர்களுக்கு என்னென்ன பொய் சொல்லிச் சமாளிப்பது? எப்படி எப்படிச் சாக்குப்போக்குக் கூறி அனுப்புவது?-என்று சிந்தித்துக் கொண்டேகுறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் திருமகள் புரொடக்ஷன்ஸ் அதிபர் பொன்னுரங்கம். நெற்றியில் வரி வரியாய்ச் சுருக்கங்கள். கண்களில் துக்கமும், அமைதியும் துறந்து சோர்ந்த கலக்கம். நெஞ்சின் ஏலாமையும், ஆற்றாமையும் நிழலாக வந்து படிந்தாற் போல் உணர்ச்சி செத்த முகம். அதில் களையும் இல்லை, ‘கலை’யும் இல்லை.

இந்தப் பன்னிரண்டு வருடங்களாகக் கை நிறையப் பிரமாதமான முதலீடு எதுவும் வைத்துக் கொண்டு படத் தயாரிப்புத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி விடவில்லை அவர். எல்லோரும் வெளியில் பேசிக் கொள்கிற மாதிரி அவர் ஒரு ‘சந்தர்ப்பவாதி’ (ஆபர்சூனிஸ்ட்), சமயோசித புத்தியும், சந்தர்ப்பம் தெரிந்து நடந்து கொள்ளும் திறமையும்தான் அவரை ஆளாக்கி வளர்த்தவை. சொந்தப் பொருள் பலம் என்று தனியாக எதுவும் எப்போதும், அவரிடம் இருந்ததில்லை. அவரிடம் இருந்த ஒரே பலம் பிரபலம்தான். அதனால்தானோ என்னவோ பிரபல சினிமா டைரக்டர், பிரபல திரைப்பட அதிபர் என்று அவர் பேருக்கு முன்னால் பிரபலம் பலமாக ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. பிற பலம், பிறர் பலம் என்று அதற்குப் பாட பேதங்கள் உண்டாக்கினாலும், பொன்னுரங்கத்துக்குப் பொருத்தமாக இருக்கும்தான்.

அங்கே இங்கே பணம் புரட்டி நிரந்து கொண்டு, படத்தை முடித்து விட்டு விட்டால் வசூல் தொகையில் பழைய கடன்கள் அடையும்; புதிய கடன்கள் உண்டாகும். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’-என்று பெரியவர்கள் பாடி