பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இருந்ததைச் சற்றே மாற்றி 'என் பணி கடன் செய்து கிடப்பதே' - என்று கடைப்பிடித்துக் கொண்டிருந்தார் திருவாளர் பொன்னுரங்கம் அவர்கள். கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால் இந்தப் பன்னிரண்டு வருட காலமாகச் சினிமாத் தொழிலை வெற்றிகரமாக நடத்தியது அவரல்ல. அவரது பொய் சொல்லும் திறமைதான். இலட்சுமி கடாட்சமும், நல்வினையும் துணையாக இருந்த வரை அவர் சொல்லிய பொய் புரட்டுக்களெல்லாம் உண்மைகளாக நம்பப்பட்டு வெற்றியை அமோகமாகத் தேடித் தந்தன. இலட்சுமி கடாட்சமும், நல்வினையும் கழிந்த பிறகு அவர் சொல்லிய உண்மைகளைக் கூடப் பொய்களாக நம்பி இன்று ஒவ்வொருவராக அவரைக் கைவிடத் தொடங்குகிறார்கள்.'அதிர்ஷ்டம்' என்று சொல்கிறார்களே, அது இப்படிப்பட்டதுதான் போலிருக்கிறது.

உலவுவதில் சலிப்புற்று நாற்காலியில் உட்கார்ந்தார் பொன்னுரங்கம். கைகள் தாமாகவே கன்னத்தில் ஊன்றிக் கொள்கின்றன. பெருமூச்சு வருகிறது. எதிர்ச் சுவரில் தாமரைப்பூமேல் நிற்கிறாற்போல் வரைந்த பெரிய இலட்சுமி படம். திருமகள் புரடெக்ஷன்ஸின் சின்னம் அது. படத்திலிருக்கிற திருமகளே தன்னைப் பார்த்து வாய் கொள்ளாமல் கேலி பண்ணிச் சிரிக்கிறாளோ எனப் பிரமை உண்டாகிறது அவருக்கு. பூவை மிதித்துக் கொண்டு நிற்கிற தெய்வம் அவர் மனத்தையே மிதிக்கத் தொடங்குகிறதா? என்ன? பூஜை போட்டுத் தொடங்கிய மூன்று படங்கள் அரைகுறையாக முடிக்கப் பொறாமல் பிலிம் சுருளாய் டப்பாக்களில் தூங்குகின்றன. முன்பணம் கொடுத்திருந்த டிஸ்டிரிபியூட்டர்கள் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.நடிகர்களிடம் கால்வுட் கிடைக்கவில்லை. 'பைனான்ஷியர்' யாரும் கடன் பணத்துக்குச் சிக்கவில்லை. படங்களுக்கு விளம்பரம் செய்த 'பப்ளிசிடி' கம்பெனிக்காரர் 'பில்’ அனுப்பியிருக்கிறார். வெளியில் சொன்னால் வெட்கக் கேடு! சர்வீஸஸுக்குக் கொடுத்திருந்த காரை பில் கட்டித் திருப்பி எடுத்துக் கொண்டு வரக் கூடப் பணமில்லை அவரிடம் ஆள் மட்டும் சுகமாய் ஏர்கண்டிஷன் அறையில் இருக்கிறார்.

“கார் ரெடி! சர்வீஸ் முடிந்து தயாராயிருக்கிறது. ஆள் அனுப்பி 'பில் கட்டி எடுத்து கொண்டு போகலாம்” என்று மோட்டார்க் கம்பெனியிலிருந்து போனில் கூறிவிட்டார்கள். "எனக்குக் காரைப் பற்றியே நினைவில்லை சார்! படப்பிடிப்பில் மும்முரமா இருக்கிறேன். வெளிப்புறக் காட்சிகள் படமாக்க இன்று உதகமண்டலம் போகிறேன். அங்கிருந்து பெங்களுர் போக வேண்டும். நேரமே இல்லை. காருக்கு இப்போது என்ன அவசரம்? திரும்பியதும் பார்க்கலாம்” - என்று டெலிபோனில் பொய் சொல்லி மோட்டார் கம்பெனிக்காரனைச் சமாளிக்கிறார். படப்பிடிப்பாவது? வெளிப்புறக் காட்சியாவது? இங்கேதான் எல்லாம் வறண்டு போய்க் கிடக்கிறதே! பணத்தைப் பிடித்தால் அல்லவா படத்தைப் பிடிக்கலாம்?

'பொய் என்று ஒன்று இருக்கிறதே! என்னைப் போன்றவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம் அது. இத்தனை காலமாக இந்தத் தொழிலுக்கு நான் போட்ட முதலீடு அதுதானே? என்று மனத்தில் அற்ப மகிழ்ச்சி சுரக்கிறது.பொன்னுரங்கம் நிமிர்கிறார். இலட்சுமி படம் சிரிக்கிறது.