பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உண்மைக்கு ஒரு நிமிஷம் 417

“பூவை மட்டும் மிதித்துக்கொண்டு நில்; போதும்.என் மனத்தையும் மிதிக்காதே!;'

குளிர் சாதன அறையின் கண்ணாடிக் கதவு திறக்கிறது. அவர் தலை மட்டும் நிமிர்கிறது. வேலைக்காரப் பையன் தலையை உள்ளே நீட்டுகிறான். சொல்கிறான் :

“சார் கலைச்சுடர் கந்தப்பன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ஆள் ரொம்பக் கோபமாக வந்திருக்கிறார் போல் தெரியுது”

“இங்கே வரச் சொல்லு”

‘தெரிந்ததுதானே? நான் நேற்றுக் கொடுத்த 'செக்' 'டிஸ்ஆனர்' ஆகிப் பாங்கிலிருந்து 'ரெபர் டு டிராயர்’னு திரும்பி இருக்கும். என்ன பொய் சொல்லிச் சமாளிக்கலாம்? ஒரு கணம் சிந்தனை. இரசிகர்களிடம் கலைச்சுடர் பட்டம் பெற்ற நடிகவேள் கந்தப்பன் கோபமாக அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். நடிகரின் அழகு முகத்தில் ஒரே சீற்றம் காணப்படுகிறது.

“திருமகள் புரொடக்ஷன்ஸாமில்லே, பேரைப் பாரு பேரை! வாசல்லே இருக்கிற போர்டைக் கழட்டி எறிஞ்சிட்டு 'மூதேவி புரொடக்ஷன்ஸ்’னு எழுதி மாட்டுங்க.." வில்லன் போல் கொதித்து இரைகிறார் கதாநாயக நடிகர்.

'செக்' கசக்கி எறியப் படுகிறது; பொன்னுரங்கத்தின் மூஞ்சியில் வந்து விழுகிறது.

“ஏது ஒரேயடியாகக் கோபப்படlங்க கந்தப்பன்?. அதுலே பாருங்க. பாங்கிலே பணத்தைக் கட்டிப்பிட்டு அப்புறம் உங்களுக்குச் செக் போடச் சொல்லி இருந்தேன். இந்தப் பசங்க மெத்தனமா இருந்திட்டாங்க.”-பொன்னுரங்கம் சிரித்து மழுப்புகிறார். 'பொய்! பொய்! பன்னிரண்டு வருட அனுபவத்தில் பழுத்த பொய்!” - என்று அவருடைய மனச்சான்று உள்ளே இடிக்கிறது. வாய் சாமார்த்தியமாகப் பொய் சொல்லி வந்த ஆளைச் சமாளிக்கிறது.

“டேய் பையா கந்தப்பன் சாருக்கு நல்ல ஆப்பிள் ஜூஸா.”

“எனக்கு ஆப்பிள் ஜூஸ் வேண்டாம் செல்லுபடியாகிற மாதிரி என் பணத்துக்கு ஒரு 'செக்' தந்தால் போதும்.”

.

“அதுலே பாருங்க, கந்தப்பன்! நீங்க நம்ம தமிழ் நாட்டுக்கே புகழ் தேடித் தருகிற பெரிய நடிப்புச் செல்வர். அசந்தர்ப்பமா நம்ம புரொடக்ஷன்ஸ் ஆபீசிலே இருக்கிற பசங்க இப்படிப் பண்ணிட்டாங்களேன்னு எனக்கும் மன வருத்தம்தான்.”

"வருத்தப்பட்டு என்ன செய்யறதுங்க கலைஞனை மதிக்கணும். இது மாதிரி.”

"உண்மை! நீங்க சொல்கிறதைத்தான் நானும் இந்தப் பன்னிரண்டு வருஷமாச் சொல்லிக்கிட்டு வரேன். கலைஞனுக்குப் பணம் பெரிசில்லே. மதிப்பளிக்கணும்”

'அட பாவி! பேச்சை என்ன அற்புதமாக மாற்றிக் கொண்டு போகிறாய் என்று உள்ளே குமுறுகிறது மனச்சாட்சி அவருடைய மனச்சாட்சியேதான்.

அரைமணி நேரம் என்ன என்னவோபேசிச் சாக்குப் போக்குச் சொல்லி ஆப்பிள் ஜூஸையும் குடிக்கச் செய்த பின் நடிகர் கந்தப்பனை அனுப்பி வைக்கிறார்

நா.பா. 1-27