பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தயாரிப்பாளர் பொன்னுரங்கம். சமாளித்து அனுப்புகிற சாமார்த்தியத்தில் தான் மன்னாதி மன்னனாயிற்றே அவர்.

டெலிபோன் மணியடிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். “ஹலோ. வணக்கம் சார் பப்ளிசிடி பில்தானே? அதுலே பாருங்க... இன்னிக்கு வெள்ளிக்கிழமை. தம்பிடி காசானாலும் வெள்ளிக்கிழமையன்னிக்கி நான் செக் புஸ்தகத்தைத் தொடறதே இல்லை. வெள்ளிக்கிழமை வீட்டு லட்சுமி வெளியேறப் படாதுன்னு ஐதீகம். நாளைக்குச் சனிக்கிழமை; பாங்கு அரை நாள்தான். உங்களுக்குத் திங்கள் கிழமை 'செக்' அனுப்பிடறேன். ஒண்ணும் மனசுலே வச்சுக்காதீங்க. ரைட்டோ. திங்கள் கிழமை கண்டிப்பா.”

டெலிபோனை வைத்துவிட்டு நிமிர்கிறார். எதிரே இலட்சுமி படம். சே! சே! ஒரு நிமிஷம்கூட உண்மை பேசவிட மாட்டாங்க போலிருக்குதே! நல்ல கழுத்தறுப்பு இது. எங்காவது ஒடிப் போயிடலாம் போலல்ல இருக்கு? கார் இருந்தாலாவது பெங்களுர் போய் இரண்டு நாட்கள் நிம்மதியா இருந்துட்டு வரலாம். அதுவும் 'செர்வீசு'க்குப் போய் மாட்டிக்கிட்டிருக்குது; பெரும தொல்லையாப் போச்சு. இந்தத் தடவை கரையேற முடியாது போலிருக்கு' என்று மனம் தவிக்கிறது. கைவிரல்கள் தலைமயிரைக் கலைத்துவிட்டுக் கொள்கின்றன. மூக்குக்கண்ணாடியைக் கழற்றி மேஜை மேல் போடுகிறார். கண்ணாடி இருந்தபோதைவிட இப்போது இன்னும் அதிகமாகக் குரூரம் காட்டுகிறது முகம்.

எதிரே மேஜை மேலிருந்த பின் குஷனில் ஒவ்வொரு குண்டுசியாக இழுத்து இழுத்துச் சொருகுகிறார். அது அலுத்ததும் கட்டைவிரல் நகத்தைக் கடிப்பதில் சிறிது நேரம் கழிகிறது. சுவர்க்கடிகாரம் பதினொரு தடவை அடிக்கிறது. எத்தனை மணியானால் என்ன? 'ஏர்கண்டிஷன்' அறையில் வெயிலா உறைக்கப் போகிறது?

மறுபடியும் டெலிபோன்மணி."ஹலோ.யாரு. ஒ! ஹரிணி ஸ்டுடியோவா? உங்க 'பில்’தானே? 'மண்டே அன்னிக்கிச் 'செக்' அனுப்பறேன். என்னது? இன்னிக்கேயா... இல்லே.... இம்பாஸிபிள். முடியாது அர்ஜண்டா இன்னிக்கு நான் பெங்களுர் போகணும். செக் எழுதச் சொல்லலாம்னாக் கூட இங்கே ஆபீசிலே யாரும் இல்லே. எனக்காக ரெண்டு நாள்.... ரெண்டே நாள் பொறுத்துக்குங்க. மண்டே அன்னிக்கி ஷ்யூரா அனுப்பிடறேன். தேங்யூ சார்.”

டெலிபோனை வைத்துவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்கும் உலவுகிறார். 'அவன் சொல்லிவிட்டுப் போனபடி தான் செய்யணும். திருமகள் புரொடக்ஷன்ஸாகவா இருக்கிறது இது? மூதேவி புரோடக்ஷன்ஸ் மாதிரிதான் ஆகிவிட்டது என்று எரிச்சலோடு முணுமுணுத்துக் கொள்கிறார். ஒரே தலைவலி, மண்டை வெடித்துவிடும்போல் குடைகிறது. காலையிலிருந்து ஒவ்வொன்றாகப் புளுகியிருக்கிற எல்லாப் பொய்களும் ஒன்று சேர்ந்து மண்டையில் போய்ச் சுமந்துகொண்டு கனக்கிற மாதிரி ஒரு வேதனை. ஒரே ஒரு நிமிஷம் யாராவது அந்தரங்கமான மனிதரிடம் உண்மையை எல்லாம் சொல்லி அழுதுவிட்டால்தான்