பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உண்மைக்கு ஒரு நிமிஷம் * 419

கனம் குறையும்போல ஒரு தவிப்பு உள்ளே உறுத்துகிறது. பன்னிரண்டு வருஷத் திரையுலக வாழ்வில் முதல் முறையாக ஏற்படுகிற பலவீனம் இது இப்படி ஒரு தவிப்பு கடந்த பன்னிரண்டு ஆண்டில் ஒரு விநாடிகூட கனவில்கூட அவருக்கு வந்தது இல்லை. எப்போதும் தைரியம்தான். எப்போதும் சமாளிக்கிற ஆற்றல் குன்றியதில்லை. கையில் பைசா இல்லாமல் வார்த்தைகளை அள்ளி வீசியே ஆட்களை வசப்படுத்தி இலட்சம் இலட்சமாகக் கறந்து படங்களை முடித்து வெற்றிவாகை குடியிருக்கிறார். இன்று முதல் தடவையாக மயங்கி, மருண்டு, மலைக்கிறது அவர் உள்ளம்.

முதல் முதலாக இலட்சுமி படத்தை நோக்கிக் கதறுகிறது அவர் மனம்,

“பூவை மட்டும் மிதி என் மனத்தை மிதிக்காதே, என்னால் பொறுக்க முடியாது.”

"சார்...!” பையன் தலையை நீட்டுகிறான்.

"யாரோ ஒரு கிழவர் கொஞ்ச வயசுப் பெண் ஒருத்தியையும் இட்டுக்கினு வந்திருக்காரு உங்களைப் பார்க்கணுமாம்."

"யார்ராது?”

"தெரியலீங்க.”

பொன்னுரங்கமே ஏர்கண்டிஷன் அறைக்குள்ளிருந்து வெளியே வருகிறார். அழகான இளம் பெண் ஒருத்தி நன்றாக அலங்கரித்துக் கொண்டு நிற்கிறாள். பக்கத்தில் கிழிசல் சட்டையும் முதுமைக் கோலமுமாக ஒரு கிழவர் நிற்கிறான். அவரைக் கண்டதும் பயபக்தியோடு கைகூப்பி வணங்குகிறார்கள் இருவரும். பெண் நல்ல களை. தெய்வீக இலட்சணம். உள்ளறையிலிருக்கும் இலட்சுமி படமே பெரிதாகி உயிரும் வடிவும் பெற்று வந்து எதிரே நிற்கிறாற்போல் அவள் நின்றாள். பொன்னுரங்கம் அதட்டிக் கேட்கிறார் :

"என்ன வேணும்? எங்கிருந்து வர்ரீங்க"

"சார் கொஞ்சம் தயவுபண்ணுங்க.நீங்க கண்திறந்தா எங்க குடும்பத்துக்கு விடியும். மதுரையிலிருந்து ரயில் சார்ஜுக்குக் கடன் வாங்கிட்டு நம்பிக்கையோடு வந்திருக்கோம் உங்க நண்பர் சிபாரிசுக் கடிதம் கொடுத்திருக்கார்"

பொன்னுரங்கம் அலட்சியமாகக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கிறார். கடிதம் அவருக்குப் பல முறை பண உதவி செய்திருக்கும் ஒரு பெரிய மனிதரிடமிருந்து கொடுக்கப் பட்டிருந்தது. .

'இந்தக் கடிதம் கொண்டு வரும் கந்தசாமி என்பவர் மிகவும் ஏழை. பெரிய குடும்பஸ்தர். எட்டுப் பெண்களுக்குத் தகப்பன். சிரம ஜீவனம் நடத்துகிறார். இவருடைய மூத்த பெண்ணுக்கு டான்ஸ், பாட்டு, எல்லாம் நன்றாக வரும் பார்க்கவும் லட்சணமாயிருப்பாள். இங்கே சில நாடகங்களில் கூட நடித்து நல்ல பேர் வாங்கியிருக்கிறாள். எனக்காக இந்தப் பொண்ணுக்குச் சினிமாவில் நடிக்க ஒரு சான்ஸ் கொடுத்து முன்னுக்குக் கொணர்ந்தாயானால் பெரியதும் உபகாரமாயிருக்கும்’