பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உண்மைக்கு ஒரு நிமிஷம் 421

வாங்கிக் கொண்டு கும்பிட்டுவிட்டுப் போகிறார். மனத்தின் உண்மையை விண்டு வைத்த அந்த ஒரு விநாடியில் ஆயிரங்காலத்து நிம்மதி கிடைத்தாற்போல் ஒரு சாந்தி நிலவுகிறது பொன்னுரங்கத்துக்குள்ளே.

டெலிபோன் மணி கிணுகினுக்கிறது. எடுக்கிறார். “ஹலோ! யாரு? பொன்னுரங்கமா? ஒரு நல்ல பைனான்ஷியர் கிடைச்சிருக்கான். ஒரு லட்சம் வரை புரளும். உன் படம் இரண்டாயிரத்துச் சொச்சம் அடி முடிஞ்சிருக்குன்னு சொன்னா பணம் புரளாது. கொஞ்சம் பொய் சொல்லித்தான் ஆகணும். பதிமூணாயிரம் அடி முடிஞ்சதாகச் சொல்லிவிட்டால் பணம் புரளும் உன் நிலைமை எனக்குத் தெரியும். அதான் உடனே சொன்னேன். என்ன, பொய் சொல்லலாம் இல்லே?" - நண்பரின் குரலைக் கேட்டு அவர் முகம் மலருகிறது.

“ஒ! பேஷா, கொஞ்சம் என்ன? நிறையவே பொய் சொல்லலாம். வரட்டுமா?” என்று நண்பருக்குப் பதில் சொல்கிறார் பொன்னுரங்கம்.

“ஆல் ரைட்! வந்து சேர்... ஒரு மணிக்கு உட்லண்ட் ஸுக்கு வா. பேசிக்கலாம்.”

“வரது சரி. ஆனால் எதுலே வரதுன்னுதான் தெரியலே. என் காரை ஒரு ஃபிரண்டுக்கு இரண்டு நாள் கொடுத்துவிட்டேன். கொஞ்சம் உன் 'பிளிமத்' காரை அனுப்பலாமே?” என்றார் பொன்னுரங்கம்.

“அனுப்பறேன்! இதுக்கு ஏன் பொய் சொல்றே? உன் கார்தான் செர்வீஸஸுக்குக் கொடுத்திருக்கியே! ஃபிரண்டுக்குன்னு ஏன் புளுகணும்.? பில் கட்டப் பணம் இராது...! பரவாயில்லை. என் வண்டியை அனுப்பறேன். வந்து சேரு”

“பொய்தான் சொன்னேன்! உனக்கு எப்படியோ நிஜம் தெரிஞ்சிருக்கு. ஆனால் இப்ப சொன்ன பொய்க்குப் பிராயச் சித்தமாகக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஒரு நிமிஷம் உண்மை பேசியிருக்கேன்; தெரியுமா?”

“ரைட்டோ! வண்டி அனுப்பறேன். வந்து சேரு, உன்னை முழுகிடாமக் கரையேத்திடறேன்.”

டெலிபோனை வைக்கிறார் பொன்னுரங்கம். எதிரே லட்சுமி படம் சிரிக்கிறது. உண்மைக்கும் ஒரு நிமிஷம் கிடைத்ததே என்று உணர்ந்த சிரிப்பா அது?

(கல்கி, நவம்பர், 1960)