பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55. வேனில் மலர்கள்
(மலர்க் காட்சி)

திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை அப்போதுதான் கவி கமலக்கண்ணன் முதல் தடவையாகச் சந்திக்கிறார்.

“உன் திருமணத்துக்கு வர முடியவில்லை, அப்பா; என்னை மன்னித்து விடு. வாழ்த்து அனுப்பியிருந்தேனே; வந்ததோ?” என்று விசாரித்தார் கமலக் கண்ணன்.

“அதனால் பரவாயில்லை, ஸார், உங்கள் அற்புதமான வாழ்த்துப் பாடல் கிடைத்தது. இப்போது நான் வந்த காரியம்....” என்று பேச்சை இழுத்து நிறுத்தினார் உதவியாசிரியர்.

கவி கமலக்கண்ணன் புன்னகை பூத்தார்.

“புரிகிறது சந்துரு. ஆண்டு மலருக்கு ஏதோ கவிதை வேண்டுமென்று எழுதியிருந்தாயே; அதைக் கேட்பதற்குத்தானே வந்திருக்கிறாய். நீ என்னப்பா இன்னும் பழைய மாதிரியே ஆண்டு மலர், சிறப்பு மலர் என்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாய்? புதிதாக இப்போதுதான் கல்யாணமாகியிருக்கிறது. வீட்டில் தனியாக விட்டு விட்டு இப்படி அலைகிறாயே அப்பனே! எங்கேயாவது ஒரு மாதம் ‘ஹனிமூன்’ போய் வரக் கூடாதோ?”

“எங்கே ஸார் நமக்கு அதெல்லாம் ஒழிகிறது? மலரை நன்றாகக் கொண்டுவந்தாலே பெரிய நிம்மதிதான். இந்தத் தடவை மலருக்கு எப்படியும் உங்கள் கவிதை கிடைத்தாக வேண்டும்.”

கவிஞர் பெருமூச்சு விட்டார். சிறிதுநேரம் அமைதியாக மோட்டு வளையை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். உதவியாசிரியருக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

கவி கமலக்கண்ணனுக்கு வயசு ஐம்பத்திரண்டுக்கு மேலிருக்கும். அவர் நைட்டிகப் பிரம்மச்சாரி. நீல அங்கியும் தாடி வளர்த்த முகமுமாகத் தாகூர் மறுபிறவி எடுத்து வந்தது போல் காட்சி அளித்தார். நாற்பது வயசுக்குள் உலக நாடுகளெல்லாம் சுற்றிப் புகழ் பரப்பி வந்திருந்தார்.

கமலக்கண்ணன் கவிஞர் மட்டுமல்ல; தத்துவ ஞானி; நல்ல அழகர், கம்பீரமான தோற்றம் உடையவர்.

“சந்துரு, இந்தக் கோடையில் உதகமண்டலம் போய் விட்டு வந்த பின் இரண்டு மூன்று மாதமாக நான் எழுதுகோலையே தொடவில்லை. உதகமண்டலத்தில்