பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே! நீங்களாகத் தானே ஏதோ கொள்கை வகுத்துக்கொண்டு துறவி மாதிரி வாழ்ந்து வருகிறீர்கள்?"

“தவறு, சந்துரு. அன்று உதகமண்டலத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கிறவரைதான் என் மனமும் எண்ணங்களும் துறவிபோல் இருந்தன. இப்போது அப்படி இல்லையப்பா. நான் என் மனத்தில் அவளை நினைவுகளாகவும், கனவுகளாகவும் சுமந்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன். வெட்கத்தைவிட்டு இதை உன்னிடம் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதோ இந்த டைரியில் மே மாதம் பதினைந்தாம் தேதியிலிருந்து இருபதாம் தேதிவரையில் உள்ளவற்றைப் படித்துப்பார். சொல்கிறேன்” என்று மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு டைரியைச் சந்திரசேகரனிடம் நீட்டினார் கவி கமலக்கண்ணன். சந்திரசேகரன் இரண்டு கைகளையும் நீட்டி மரியாதையாக அதை வாங்கி விரித்துப் படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியப்புத் தாங்கவில்லை.

கவி, அங்கில்லாததும், எங்கிருப்பதென்று தெரியாததும், ஆனால் எங்கோ நிச்சயமாக இருப்பதுமான ஏதோ ஒன்றை அங்கம் அங்கமாக நினைத்துக் கூட்டி இணைத்துக் காண முயலும் பார்வையால் மீண்டும் மோட்டு வளையை வெறித்துப் பார்க்கலானார்.

உதகமண்டலம் மே-மாதம் 15ஆம் தேதி - இரவு எழுதியது.

இன்று என் மனம் எல்லையற்ற உற்சாகத்தை அடைந்திருக்கிறது. மாலையில் இவ்வூர் 'பொடானிகல் கார்டனில்' நடைபெற்ற மலர்க் காட்சிக்குப் போயிருந்தேன். "ஃபிளவர் ஷோ'வைப் பற்றி நண்பர்கள் வானளாவப் புகழ்ந்து பெருமை பேசிய அருமை இன்று இங்கு அதைப் பார்த்த பின்பல்லவா தெரிகிறது? அடடா! உலகத்தில் இத்தனை விதமான நிறமும், இத்தனை வகை உருவமுள்ள பூக்களும் இருக்கின்றன என்று இன்று மொத்தமாகத் தெரிந்து விட்டது! வர்ணக் களஞ்சியம் என்பதா? இயற்கையின் பல வேறு நிறப் புன்னகைகள் என்பதா? என்ன அழகு! என்ன அழகு! இன்றையப் பூக்காட்சியில் என் மனத்தைத் துள்ளச் செய்து பெருமித மூட்டும் வெறொரு நிகழ்ச்சியும் நடந்ததே!

வகை வகையான பூக்காட்சி முழுவதும் சுற்றிப் பார்த்த வியப்பில் மனம் லயித்து அந்தப் பூங்காவின் புல்வெளியில் உட்கார்ந்தேன். சுற்றிலும் நீலமலைகளின் முடிகளில் மேகம் நகரும் அழகு தெரிந்தது. ‘பூக்கள், பசும்புல்வெளிகள், ஊசி இலைகளைச் சிலிர்த்து நிற்கும் தூண் தூணாக யூகலிப்டஸ் மரங்கள், உருளைக்கிழங்கு வயல்கள், இயற்கையின் செளந்தரிய வெள்ளமாய் எழுதாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கும் இவைகளுக்கு முன் என் கவிதைகள் எம்மாத்திரம்?’ என்பது போல் ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டாயிற்று. நிறங்களின் கொள்ளையாய், எழில்களின் வகைகளாய் அந்த மலர்க்காட்சிகளையும், மலைகளையும், மரங்களையும் காணும் போது என்னுடைய கவிதைகள் இவற்றை எல்லாம்விட அப்படி ஒன்றும் பெரியன