பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வேனில் மலர்கள் 425

அல்ல என்பதுபோல் சிறுமைப் பட்டு ஏங்கினேன். மனத்தில் ஒரு வறட்சி. நாம் பெரிதாக எதையுமே செய்துவிடவில்லை' என்கிற மாதிரி மூளித்தன்மை குடைகிறது.

'இயற்கை, பொருள்களைப் படைத்து அவற்றுக்கு விதவிதமான அழகுகளைத் தந்தது. அந்தப் பொருள்களைக் கொண்டுதான் மொழிக்குச் சொற்கள் கிடைத்தன. அந்தப் பொருள்களின் அழகுகளைக் கொண்டுதான் சொற்களின் அர்த்தங்களுக்கு அழகு ஏற்பட்டது. சொற்களும் அர்த்தங்களும் அவற்றுக்கு அழகுகளும் ஏற்பட்டிருக்காவிட்டால் நீ பாடியிருக்க முடியுமா? நீ சொற்களின் தரகன். சொற்கள் இயற்கையின் நாமங்கள். உன்னால் முடிந்தது அவற்றை இணைத்ததுதான்’ என்று உள்ளத்தில் ஏதோ குத்திக் காட்டுகிறது. தாங்கிக் கொள்ள முடியாத ஏக்கத்தினால் தவிக்கிறேன். தாழ்வு மனப்பான்மையினால் சுருங்கி சிறுத்து ஒடுங்குகிறேன்.

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கும்போது அந்தத் தாழ்வு மனப்பான்மை அதிகமாகிறது. மேலும் நினைக்கிறேன். இந்த மலைகளின் சூழலில் இப்போது இங்கே யாரும் என்னுடைய கவிதைகளின் புகழில் ஏங்குவதாகத் தெரியவில்லையே? அவ்வளவு ஏன்? நினைப்பதாகவோ பேசுவதாகவேகூடத் தெரியவில்லையே? கமலக்கண்ணன் உலகம் போற்றும் கவிதைகளைப் பாடி என்ன பயன்? அப்படி ஒரு கவி இந்தத் தமிழ்நாட்டில் இருப்பதையே மறந்து விட்டுப் பூக்காட்சியின் விந்தைகளைப் பார்த்து இந்த மலைநகரம் முழுவதும் புகழ்கிறது; மயங்குகிறது; போற்றுகிறது! இவ்வளவு பெரிய பூங்காவில், இவ்வளவு பெரிய மலர்க் காட்சியில் இத்தனை மனிதர்களுக்கு நடுவே இவ்வளவு நேரம் சுற்றினேனே "கவி கமலக்கண்ணன் தமது வேனில் மலர்கள் என்ற பாடல் தொகுதியில் பாடியிருப்பதெல்லாம் இந்தப் பூக்காட்சியைப் பார்த்ததும் நினைவு வருகிறதே! என்று எவனாவது ஒருவன்கூட இன்னொருவனிடம் வாய் தவறியும் பேசினதாகக் காதில் விழவில்லை! கடந்த ஒரு வாரமாக இந்த நீலகிரியின் எழில்வாய்ந்த பகுதிகளில் சுற்றித் திரிகிறேன்! தொட்டபெட்டா சிகரத்தில் நின்றபோது, குதிரைப் பந்தய மைதானத்தில் கும்பலினிடையே நின்று கொண்டிருந்தபோது, கடைவீதிகளில், பூங்காக்களில் எங்காவது எவனாவது ஒருவன்கூடக் கவி கமலக்கண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே! கவிகளின் நினைவே வேண்டியிராத இடமா இது? மலைகளைப்பற்றி, மேகங்களைப் பற்றி, பூக்களையும், மரங்களையும் பற்றிக் கவி கமலக்கண்ணன் விதவிதமாகப் பாடியும், புகழ் பெற்றும் என்ன பயன்? மலைகளின் நடுவே, மேகங்களின் கீழே, பூக்காட்சிக்குள்ளே, கமலக்கண்ணன் பாடிய செளந்தரியத்தைப் பார்த்துக்கொண்டே கமலக்கண்ணனைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளாமல் போகிறார்களே! இயற்கையின் அழகுகளுக்கும், வார்த்தைகளின் பொருளுக்கும் நடுவேயுள்ள சொற்களின் தரகன்தானா நான்? எனக்கென்று வேறு தனிப்பெருமையே இல்லையா? ஒரு வாரமாக இருந்த ஏக்கம் மேலும் இறுகுகிறது. இவ்வாறு எண்ணிப் புண்பட்டுப் போன மனத்துடன் பூக்காட்சி நடக்கிற பூங்காவின் புல்வெளியில் அயர்ந்து சாய்கிறேன்.அந்த சோர்வான சமயத்தில் பின்புறம் புல்வெளியில் மூலையில் கும்பலாக அமர்ந்திருந்த பெண்களில் யாரோ ஒருத்தியிடமிருந்து என் பெயர் வளை