பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஒலிக்கிடையே அமுத ஒலியாய்க் கேட்கிறது. பிள்ளைப் பருவத்துச் சிறு பிள்ளைபோல் மிழற்றுகிறாள் ஒரு பெண்.

“போடி, நீ என்னவோ கவிதை எழுதுவதாகப் பிரமாதமாகப் பீற்றிக் கொள்கிறயே! மலைகளையும், மேகங்களையும், பூக்களையும் பற்றிக் கமலக்கண்ணன் தம் வேனில் மலர்கள் என்ற கவிதைத் தொகுதியில் பாடியிருப்பதைப் போல் இனி யாருமே பாட முடியாது.”

ஆர்வத்தோடு இவ்வாறு கூறிய இனிய குரலுக்கு உரியவளை நான் திரும்பிப் பார்க்கிறேன். முகம் தாமரையாய்க் கண் கருவிளையாய் வாய் செங்குமுதமாய் நாசி எட்பூவாய்ப் பூக்காட்சியில் மற்றாரு பூக்காட்சியென அந்த இளம்பெண் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறாள். இவ்வளவு அழகுகளுக்கு இருப்பிடமாய் ஒரு பெண் இருக்க முடியும் என்ற உண்மையையே இன்றுதான் முதன்முதலாகப் புரிந்துகொண்டவன் போல் அவளைப் பார்க்கிறேன். பச்சைப் புல்தரையில் மஞ்சள் வாயில் புடவை அணிந்து சற்றே நளினமுறச்சாய்ந்து மண்டியிட்ட கோலத்தில் மண்ணில் விளையாட வந்த கந்தர்வப் பெண்போல் வீற்றிருக்கிறாள். நல்ல உயரம், நல்ல சிவப்பு, அவள் சிரிக்கும்போது முகம் முழுவதும் மூக்கிலுள்ள வைர பேஸரி, காதிலுள்ள வைரத்தோடுகள், எல்லாமே சேர்ந்து அழகாய்ச் சிரிப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது. இதழ்களின் சிரிப்பை வாங்கிப் பிரதிபலித்துக் காட்டுவதுபோல் அந்த மூக்குத்தி மினுக்கும் அழகே அழகு.

'கவி கமலக்கண்ணனுக்கு இத்தனை அழகாக ஒரு ரசிகையா?' என் மனம் பொங்குகிறது; பூரிக்கிறது. இப்படி ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டால் என்ன? என் மனத்தில் கவிச் சொற்கள் கனிந்து துடிக்கின்றன. நான் ஐம்பத்திரண்டு வயசிலிருந்து இருபத்திரண்டு வயசு இளைஞனாகி விடுகிறேன்.

கண்பூவாய்க் கைபூவாய்க்
கமலச்செவ் வாய்பூ வாய்ச்
செம்பவழ இதழ்நடுவிற்
சிரிக்கின்ற நகைபூவாய்ப்
பெண்பூத்துப் பொலிகின்றாள்
பிறழ்மின்போல் நெளிகின்றாள்!

என்று அங்கேயே அறைகுறையாகத் தப்போ, சரியோ தோன்றிய வரிகளைக் குறித்துக் கொள்கிறேன். தத்துவ ஞானியும், அப்பழுக்குச் சொல்ல முடியாத துறவியுமான கவி கமலக்கண்ணனுடைய மனம் ஒரு பெண்ணின் அழகில் நெகிழ்கிறது. அந்த அழகை வருணித்துப் பித்தன்போல் கவியும் பாடுகிறது. வேடிக்கைதான்!

உதகமண்டலம், மே மாதம், 16ஆம் தேதி இரவு :

இது என்ன ஆச்சர்யம்! நேற்று 'பொடானிகல் கார்டனில்' பார்த்த பெண் எங்கே இருக்கிறாளோ, யாரோ என்று நான் தவித்த தவிப்பைத் தீர்ப்பவள்போல் எதிர்த்த