பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி/வேனில் மலர்கள் * 427

அறையிலிருந்து வெளிவருகிறாளே! நான் தங்கியிருக்கும் இதே விடுதியில் எதிர் அறையில்தானா அந்தப் பெண்கள் கூட்டமும் தங்கியிருக்கிறது? ஏதோ கல்லூரி மாணவிகள் சேர்ந்து உல்லாசப் பயணம் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

எதிர் அறையில் அவளுடைய குரல் ஒலிக்கும் போதெல்லாம் கவி கமலக்கண்ணனுடைய பெருமையைப் பேசுவதாகவே ஒலிக்கிறது. கமலக்கண்ணனுக்கு எத்தனை அழகான ரசிகை|

என் மனம் மலையத்தனை உற்சாக உயரத்தில் ஏறி நிற்கிறது. நேற்றும் இன்றும் உதகமண்டலம் மிக அழகாக மாறிவிட்டது. இங்கே இந்த இயற்கையழகுக்கு நடுவில் கவி கமலக்கண்ணனாகிய என்னைப் பற்றியும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். நான் சொற்களின் தரகன் அல்ல; கவிகளின் நாயகன்; இதோ இந்த இரவின் அமைதியில் எதிர்த்த அறையில் அந்தப் பெண் தன் தோழிகளுக்கு என் 'வேனில் மலர்களை' இசை வெள்ளமாய்ப் பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறாள். நான் எத்தனை பாக்கியசாலி! மாதுளை மொட்டுப் போன்ற அவன் உதடுகளில் எழும் இசையின் சொற்கள் என்னுடையவை அல்லவா? அந்தச்சொற்களை அப்படிக் கவிதையாய் இணைத்தவன் நான் அல்லவா? இப்படி ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவள் பாடிக் காட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காகவே லட்சோபலட்சம் கவிதைகளை நான் எழுதலாமே! உம்! இந்த வயசுக்குமேல் அது சாத்தியமாகுமா?

உதகமண்டலம். மே மாதம், 17-ஆம் தேதி இரவு:-

நான் மகா யோகக்காரனாகி விட்டேன். இன்று அந்தப் பெண் தயங்கித் தயங்கி என் அறைக்குள் நுழைந்து கமலப் பூக்கரங்களைக் கூப்பி வணங்கினாள். பேசினாள்: “முதலில் நேற்று உங்களைப் பார்த்தபோதே நீங்கள்தாம் கவி கமலக்கண்ணனாக இருக்க வேண்டுமென்று சந்தேகமுற்றேன். இன்று விடுதி மானேஜரிடம் விசாரித்தபோது என் சந்தேகம் தீர்ந்தது. எனக்கு உங்கள் கவிதை மிகவும் பிடிக்கும்.”

"உட்கார் அம்மா. நீ நேற்றிரவு என் வேனில் மலைகளை நன்றாகப் பாடினாய். நானும் கேட்டேன்.”

நீண்டநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனாள் அந்தப் பெண். என் மனத்தில் உல்லாசத்தை நிரப்பிவிட்டுப் போனாள் என்பதுதான் பொருத்தமான வாக்கியம். நாளைக்காவது அன்று மலர்க் காட்சியில் கிறுக்கின அவளைப் பற்றிய கவிதையை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும். தத்துவம், தெய்வீகம், இயற்கை இவற்றை நீக்கிப் பெண்ணழகைப் பற்றிக் கமலக்கண்ணன் பாடும் முதற் கவிதை இதுவாகத்தான் இருக்கும்.

உதகமண்டலம். மே மாதம், 18ஆம் தேதி இரவு:-

இன்று பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் ஒரு கேள்வி கேட்டாள்: “உங்கள் கவிதைகளை எழுதும் அனுபவங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன?”