பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஏணி * 41 மேலும் கீழும் ஏறியும் இறங்கியும் போகின்றவர்கள் தவிர, ஏணி சார்த்தின இடத்திலேயேதானே இருக்கிறது? பள்ளிக்கூடத்து ஆசிரியரானால் என்ன? கல்லூரிப் பேராசிரியரானால் என்ன? அவர்கள் சமுதாயத்திற்கு ஒரு வகையில் ஏணியாகவே பயன்படுகிறார்கள் என்பது பூர்ணமான உண்மைதானே? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று அவர்களுக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கும் பாராட்டுப் பழமொழியும்கூடக் குதிரையைச் சவாரியில் ஈடுபடுத்தும்போது கண்ணை மறைத்து இடும் கண்ணுறைபோல ஒர் பெரிய ஏமாற்று வேலைதான்! 'சை! இது என்ன வேலை? இந்தப் பாழாய்ப்போன வியாதியிலிருந்து பிழைத்தெழுந்தால் முதல் காரியமாக இதை விட்டுத் தொலைக்க வேண்டும். எம்.ஏ. முதல் வகுப்பில் தேறியவனுக்கு வேறு வேலையா கிடைக்காமல் போய்விடப் போகிறது? இதயம் வறண்டுபோகும்படி தொண்டைக்குழி புண்ணாகின்றவரை கத்திக் கத்தி உயிரை விட வேண்டிய இந்த உத்தியோகம் நம்மை என்றைக்கு எப்படிக் கொன்று வைக்குமோ?. நித்ய கண்டம் பூர்ணாயுள்தான். சொல்லுவதற்கில்லை! ‘வாழ்ந்தால் நரசிம்மனைப்போல ஒரு கலெக்டராகவோ சர்க்காரில் பெரிய உத்தியோகஸ்தராகவோ வாழ வேண்டும். ஆத்மாவாவது, திருப்தியாவது? பையன்களும், காலேஜ் நிர்வாகிகளும் பிரியமாக இருந்தால், அதனால் நமக்கென்ன ஆயிற்று? வேலை என்னவோ, ‘ஏணியைப் போல மற்றவர்கள் மேலே ஏறிச் செல்வதற்குப் பயன்படும் வேலையே ஒழிய, தான் முன்னேற முடியாததுதானே. உண்மையில் நரசிம்மன் சொல்லிவிட்டுப் போனமாதிரி, 'என் ஆத்ம திருப்தியா இது? ஆத்மஹத்திதானே? என் ஆத்மாவை தானாகவே ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்? ஆம்! கூடாது! கூடவே கூடாது? இங்கிருந்து பிழைத்து வெளியேறினால் முதல் வேலை காலேஜில் என் உத்தியோகத்தை ராஜிநாமா செய்வதுதான். ரகுநாதன் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டார். நரசிம்மனின் வார்த்தைகள் அவர் மனத்தில் உண்டாக்கியிருந்த கொந்தளிப்பு அவரை இந்த முடிவுக்கு வரச்செய்துவிட்டது. 'எனக்கிருப்பது ஒரு பையனும் மனைவியும். நான் நாளைக்குச் செத்துவைத்தேன் என்றால், அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதானே? வேறு சர்க்கார் உத்தியோகத்தில் இருந்துவிட்டுச் செத்தேன் என்றால், அவர்களுக்கு ஏதாவது உதவியாவது கிடைக்கும்!” இந்த முடிவான தீர்மானம் உறுதியாவதற்குத் துண்டுகோல் போல நரசிம்மன் அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசி விட்டுப் போகும் பேச்சுகளும் பயன்பட்டன. ஒவ்வொரு தடவை வந்துவிட்டுப் போகும்போதும் அந்த ‘ஏணி’ என்ற உபமானத்தைச் சொல்லாமல் நரசிம்மன் போவதில்லை. ரகுநாதனின் இதே உறுதியான மனமாற்றத்தினால், வேறு உத்தியோகம் பார்ப்பதற்காகவாவது விரைவில் உடம்பு தேறி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நம்பிக்கையும் அவருக்கு உண்டாகிவிட்டிருந்தது. இதயத்தை அறுத்துவந்த கவலையும் ஓரளவு எதிர்காலத் தீர்மானம் எனும் அந்த நம்பிக்கையினால் போக்கப்பட்டுவிட்டது. பதினைந்து, இருபது நாட்களுக்குப் பின்பு.