பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

நான் வழக்கமாக எல்லோருக்கும் கூறுகிற பதிலைச் சொன்னேன்.அவள் குறும்புச் சிரிப்பும், குறும்புப் பார்வையுமாக என்னை நோக்கி, ‘என்னைப் பற்றி ஒரு பாட்டு எழுதிக்கொடுங்களேன்,பார்க்கலாம்" என்றுவெள்ளைத்தனமாகக் கேட்டுவிட்டாள்.

"உன்னைப்பற்றிநேற்றே பாடியிருக்கிறேன்” என்று பதிலுக்கு நான் சொன்னதும் அவளுக்கு வியப்பாகிவிட்டது. அவளைப் பற்றி நான் பாடிய சில வரிகளைச் சொல்வி அந்த வியப்பைப் பின்னும் அதிகமாக்கினேன். அப்போது அவள் முகம் இணையிலா நாண அழகு சுரந்து நகைத்தது. என் மனம் பூரித்தது.

உதக்மண்டலம் மே மாதம், 19-ஆம் தேதி இரவு:-

இன்று காலை அந்தப் பெண்கள் குழு ஊருக்குப் புறப்பட்டுவிட்டது.

புறப்படுமுன் அவள் என் அறைக்கு வந்தாள். அவளுடைய கைகளில் என் வேனில் மலர்கள் என்ற கவிதைப் புத்தகம் இருந்தது.

"நாங்கள் இன்று ஊர் புறப்படுகிறோம். உங்கள் நினைவுக்கு அறிகுறியாக இந்தப் புத்தகத்தின் முதற்பக்கத்தில் நீங்கள் என்னைப் பற்றிப்பாடிய அந்தப் பாட்டை மட்டும் எழுதிக் கையெழுத்திட்டுத் தருவீர்களா?”

அவள் விருப்பப்படியே 'கண்பூவாய்' என்ற அந்தப் பாட்டை அப்படியே அரைகுறையாக எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தேன். வணங்கி நன்றி சொல்லிவிட்டுப் போனாள். இதுவரை எங்குமே கண்டிராத அந்த எழில் முகத்தைக் கூடியவரை மனத்தில் பதித்துக்கொள்ள முயன்றேன். மனம் எதற்கோ ஏங்குகிறது.

உதகமண்டலம். மே மாதம், 20ஆம் தேதி இரவு:-

போயும் போயும் இது என்ன ஊர்? இங்கே குதிரைப் பந்தயத்தைப் பற்றிக் கவலைப்படுகிற மனிதர்கள் இருக்கிறார்கள். தொட்டபெட்டா சிகரத்தையும், 'பொடானிகல் கார்டனின்' பூ வகைகளையும் பார்த்து வாய் அங்காந்து ரசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், கமலக்கண்ணன் என்கிற கவியைப்பற்றி நினைக்கிறவர்கள் கூட இந்த ஊரில் இருப்பதாகத் தெரியவில்லை. மனமே வறண்டுவிட்டது. நாளைக் காலையில் இங்கிருந்து ஊருக்குப் புறப்பட்டுவிட வேண்டியதுதான்.

உதவியாசிரியர் சந்திரசேகரன் டைரியின் பக்கங்களை முடிவிட்டு நிமிர்ந்தார். கவிஞரை நோக்கிக் கூறினார்: “ஸார், உங்களிடம் பாட்டு எழுதிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு போன இந்தப் பெண்ணை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் இப்போது இந்த ஊரில்தான் இருக்கிறாள். அவளைப் பார்த்து நீங்கள் இந்த அறைகுறைப் பாடலை நிறைவு செய்ய முடியுமானால் இன்று மாலையே அவளிடம் உங்களை அழைத்துப் போகிறேன்.”

இதைக் கேட்டுக் கவிஞரின் முகம் மலர்கிறது. கண்களில் ஒளி பாய்கிறது.

"நிஜமாகவா சந்துரு?”