பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56. விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை!

சுப்பையா எங்கள் வீட்டிற்கு வழக்கமாகக் காய்கறிகள் விற்கும் வியாபாரி. காலையில் வீட்டு முன்புறத்தில் உட்கார்ந்து நான் எழுதிக் கொண்டிருப்பேன். சரியாக எட்டரை மணிக்குக் காய்கறிக் கூடையோடு சுப்பையா வந்து விடுவான். ஆள் சுறுசுறுப்பானவன். யாரோடும் கலகலவென்று சிரித்துப் பேசும் சுபாவம் அவனுக்கு உண்டு. வயது கூட அதிகமில்லை; இளைஞன் என்றே சொல்லலாம்.இருபத்தெட்டுக்கு மேல் மதிக்க முடியாது. அவனுடைய தோற்றம் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

இத்தோற்றமும் எதைப் பற்றியும் யாரிடமும் மனம் விட்டுப் பேசுகிற இயல்பும்தான் அவனுக்கு நல்ல பெயர் தேடிக் கொடுத்திருந்தன. அரசியலில் தொடங்கி, அன்றைய கத்தரிக்காய் விலை வரை என்னிடம் விவாதித்துப் பேசுவான் அவன். கல்லூரியில் எண்ணற்ற மாணவர்களுக்குப் பேசியே அறிவை வளர்த்து வரும் பேராசிரியனாகிய நான் சுப்பையாவின் பேச்சை அலுக்காமல் சலிக்காமல் கேட்கத் தொடங்கி விடுவேன். ஒரு விதமாகச் சிரித்துக் கொண்டே அவன் கையை ஆட்டி ஆட்டிப் பேசுவதைக் காண விநோதமாக இருக்கும். ஒரு நாள் நான்,”இப்படி எல்லாம் பேசுகிறாயே? பள்ளிக்கூடத்தில் எது வரை படித்திருக்கிறாய்?” என்று சுப்பையாவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.

“என்ன பள்ளிக்கூடத்துப் படிப்பு வேண்டியிருக்குதுங்க? நானும் ஐந்தாம் பாரம் வரையிலே படிச்சேன். ஐந்தாவது பாரத்திலே ஒரு வருஷம் உட்கார்ந்திட்டேனுங்க! எங்க அப்பாரு படிப்பை அதோட நிறுத்திட்டாருங்க. அதிலேருந்து இந்த வியாபாரந்தான்!”

“பலே! ஐந்தாவது பாரம் வரை படித்திருக்கிறாயா? நீ பேசுகிற பேச்சின் விமரிசையைப் பார்ததால், எம்.ஏ. படித்தவன் உன்னிடத்தில் பிச்சை வாங்க வேணும், போ”

“ஐயா, என்னை ஒரேயடியாத் தூக்கிவிட்டுப் பேசுறீங்க, ஏதோ அனுபவத்திலே கண்டதைச் சொல்வேனுங்க”

“அப்படியில்லை, சுப்பையா. இயற்கையாகவே எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் உனக்கு நன்றாகப் பேச வருகிறதப்பா, இது ஒரு வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.”

“சரியாப் போச்சுப் போங்க”