பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“எங்கள் காலேஜில் நான் நின்று பேசவேண்டிய அதே இடத்தில் 'டிப்டாப்'பாகக் கொண்டு போய் உன்னை நிறுத்தினால்கூட வெளுத்துக் கட்டிவிடுவாய் போலிருக்கிறதே, சுப்பையா!

“என்னங்க நீங்க? என்னைக் கேலி பண்ணுறீங்களா!

“அட, அதற்குச் சொல்ல வரவில்லை அப்பா!. சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டாயே?”

"சொல்லுங்க. ஐயா!”

"தெருத் தெருவாய்க் காய்கறி சுமந்து விற்கிற வியாபாரத்தை நீ இன்றோடு விட்டுவிடு. இந்த மாதிரி சாதாரணமான காரியத்துக்கு உன்னைப்போல் ஒரு நல்ல விநயஸ்தன் வேண்டும் என்பது இல்லை”

"அது சரிங்க, இந்த வியாபாரத்திலே உங்களுக்கு எதுங்க அப்படிக் கேவலமாப் படுது..?

"இதிலே என்னென்ன கேவலம் இருக்கிறதென்று நான் வரிசையாக வருணிக்க வேறு வேண்டுமென்கிறாயா?”

“அது இல்லிங்க வந்து.எனக்கு உங்க கருத்து விவரமாப்புரிய வேண்டாமுங்களா? அதுக்காகத்தான் கேக்கிறேன்.வேறே ஒண்ணும் தப்பாக நினைச்சுக்கிட வேணாமுங்க”

"தெருத் தெருவா நடந்து தலைகனக்கக் கூடை சுமக்க வேணும். 'கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய்’னு தொண்டை கிழியக் கத்த வேணும். இப்படியெல்லாம் செய்தும் 'பேரம்' பேச வருகிறவர்கள் நாவில் ஈரமின்றி விலை கேட்பார்கள். இது என்ன வேலை? வேலையற்றவனுக்கு வியாபாரம்’னு சொல்வதுண்டு அதுவும் இப்படித் தெரு வீதியிலே தினம் தினம் கூவி விற்கிற வியாபாரம் இன்னும் அதிக மோசம்!”

"அப்படின்னா என்னை என்ன செய்யச் சொல்றீங்க?”

சுப்பையாவின் இந்தக் கேள்வி கொஞ்சம் அமுத்தலாகவே இருந்தது. அவன் இப்படிக் கேட்ட தோரணையில் ஏதோ மறைந்து நிற்பது போலவும் தோன்றியது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவனுக்கு மறுமொழி கூறினேன்.

“செய்கிறது என்ன? நீ படித்த பழைய பள்ளிக்கூடத்து ‘சர்டிபிகேட்டுக்களை' எல்லாம் கொண்டு போய்க் காட்டி உன் பேரை “எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்'சில் பதிந்து கொள். ஏதாவது 'கிளார்க்', 'அட்டெண்டர்' வேலைகள் வந்தால் 'ஆர்டர்’ அனுப்புவார்கள். அப்புறம் உன் பாடு யோகம்தான்.!”

“நல்லதுங்க, ஆனா ஒரே ஒரு சந்தேகம் உண்டாகுதுங்க!”

என்ன, சுப்பையா?

"கிளார்க் வேலையும் 'அட்டெண்டர் வேலையும்கூட ஒரு விதத்திலே பார்த்தா வியாபாரந்தானுங்களே?”