பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை! 433

நான் திடுக்கிட்டேன். அம்பின் கூர்மை அவனுடைய இந்தக் கேள்வியில் நிறைந்திருந்தது. சற்றுமுன் அவன் அமுத்தலாகக் குழைந்து குழைந்து பேசியதன் தாத்பரியம் எனக்கு விளங்கியது. விவாத மேடையிலும் ஆட்டுக்கிடாய்ச் சண்டையிலும் எதிரி பின் வாங்கினால் நல்லதில்லை என்பார்கள். அதுமாதிரித்தான் சுப்பையாவின் குழைவு. அவன் சரமாரியாகப் பேசத் தொடங்கப் போகிறான் என்பதற்கு அறிகுறிதான் இந்தக் குழைவு.

"உன்னுடைய தத்துவ விளக்கம் எனக்குத் தேவையில்லை, சுப்பையா! நீ இந்தத் தெரு வியாபாரத்திலே இருக்கிற நிலைமையைவிடக் கொஞ்சம் அந்தஸ்துடனே கட்டின வேட்டி கசங்காமல் வாழலாம். அதற்காகத்தான் சொன்னேன். இல்லையென்றால் எனக்கு என்ன வந்ததப்பா... அவ்வளவு அக்கறை உனக்கே இல்லாதபோது?”

“அடடே! ஐயா இதுக்குள்ளாரக் கோபிச்சுக்கிடுறியளே?. நான் இதெல்லாம் வஞ்சகமாக் கரவடமாப் பேசறதில்லிங்க. ஏதோ ஒரு பேச்சுக்குச் சொல்ல வந்தேன். மனசு புண்படுமின்னா வேண்டாமே!”

“இல்லை சுப்பையா, உன் விளக்கத்தையும் சொல்லித்தான்ஆக வேண்டும். நான் கோபப்படவில்லை. நீ நிறுத்திப்பதறாமல் சொல்லேன் கேட்கிறேன்!.”

அவன் மறுமொழியால் மனங்குளிர்ந்த நான் என் சினத்தை மாற்றிக் கொண்டு, அவனுடைய விளக்கத்தைக் கேட்கத் தயாரானேன்.

"ஐயா, கோபப்படாமக் கேளுங்க.தப்பிதமா நினைச்சிக்கிடாம என் கேள்விக்கும் கொஞ்சம் பதில் சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்!”

“என்ன கேட்க வேண்டுமோ, கேள், சொல்கிறேன் சுப்பையா?”

"ஐயா, எதுவரைக்கும் படிச்சிருக்கிறீங்க?. கேள்வியை வித்தியாசமா எடுத்துக்கிடாதீங்க!”

“எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறேன், சுப்பையா!

"அதுக்கு எத்தனை வருஷம் படிக்கனுமுங்க?”

"ஹைஸ்கூல் படிப்புக்குமேல் ஆறு வருஷம் படிக்க வேண்டும் அப்பா

“உங்களுக்கு என்ன செலவு ஆயிருக்குமுங்க?”

"நீ எதற்காக வளைத்து வளைத்துக் கேட்கிறாய்?...பத்தாயிரம் ரூபாய்க்குமேல் என் காலேஜ் படிப்புக்கு மட்டும் செலவாகியிருக்கும்'!

"நீங்க அவ்வளவு செலவழிச்சி ஏனுங்க அந்தப் பட்டப் படிப்பு வரை படிச்சீங்க? அதுக்கு இப்போ என்ன பிரயோசனமுங்க?”

"அதென்ன சுப்பையா அப்படிக் கேட்டுவிட்டாய்? அந்தப் பட்டப் படிப்பு படிக்கவில்லை என்றால் இப்போது நான் காலேஜில் புரொபஸராக எப்படி இருக்க

நா.பா.1-28