பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

முடியும்? மாதம் ஐந்நூறு, அறுநூறு என்று சம்பளம் எப்படிக் கிடைக்கும்? உன் கேள்வியே அர்த்தமில்லாமல் இருக்கிறதே? ஏதோ வாய்க்கு வந்ததைக் கேட்கிறாயே..?”

"இல்லீங்க, அர்த்தத்தோடேதான் கேட்கிறேன். நான் காலேஜிப் படிப்புப் படிக்கலீங்க ஆனா எதைப் பத்தியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவேனுங்க. அதைக் கொண்டு பேசுவேனே தவிர, நானா வாயில் வந்ததைப் பேசமாட்டேனுங்க”

“சுப்பையா, உன் பேச்சு ஒரு தினுசாகப் போகிறதே...? என்னையே தாக்கத் தொடங்கிவிட்டாய்?. பரவாயில்லை அப்பா. பரவாயில்லை. தேர்ச்சிதான்.சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடு. உன்னிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறதோ? குறையையும் கேட்டு விடுகிறேன்!”

“பார்த்தீங்களா, பார்த்தீங்களா, ஆத்திரப்படுறியளே?. என் மேலே கோவம் ஏனுங்க? கருத்திலே பிழையில்லையானா என் மேலே சினந்துகிட்டு என்ன ஆவப்போவுதுங்க?”

“சரியப்பா சரி, சொல்லியழு. போயும் போயும் காலை நேரத்திலே உங்கிட்டே வாயைக் கொடுத்தேனே? நீ என்றைக்கும் போலப் 'பழைய சுப்பையாதான்’னு எண்ணியிருந்தேன். இன்றைக்கு என்னவோ நீ ஒரு மாதிரிப் பேசறே? என்றைக்குமே அடைந்திராத வெறுப்பை அன்றைக்கு அடைந்தவனாகச் சலித்துக்கொண்டே அவனைக் கேட்டேன் நான்.

“தப்புங்க தப்பு. இந்தப் பேச்சை உங்க மேலே இருக்கிற ஆத்திரத்தினாலே நான் பேசலீங்க. உங்க கருத்து மேலே இருக்கிற ஆத்திரம்தானுங்க. 'கத்தரிக்காயும், வாழைக்காயும் சுமந்துக்கிட்டுத் தெருவிலே 'காய்கறி, காய்கறீ'ன்னு கூவி விக்கிற வியாபாரம் இழிவு. கிளார்க்கோ, அட்டெண்டரோ ஆகி அறுபது ரூபாக்காசுக்கு முழு நேரத்தையும் கூவாமலே விற்கும் அடிமை வேலை உயர்வு' அப்படிங்கிற கருத்து உங்ககிட்டே இருக்குங்க. இந்தத் தவறான கருத்தை நினைச்சாத்தான் எனக்கு ஆத்திரம் பத்திக்கிட்டு வருதுங்க!”

“அது சரி சுப்பையா. நீ எப்படியிருந்தால் எனக்கென்ன? என்னைக் கேள்வி கேட்டாயே அந்தக் காரணம்தான் எனக்கு விளங்கவில்லை! பெருமூச்சொன்று என்னிடமிருந்து வெளிப்பட்டது.அப்போது அந்த ஆவேசநிலையில் சுப்பையாவைப் பார்ப்பதற்கே எனக்குப் பயமாக இருந்தது.

அவன் மறுமொழி கூறலானான்.

“உங்களைப் பத்திக் கேட்டதுங்களா?. வேண்டாமுங்க. அதை விட்டுடுங்க. நீங்க இதுக்கே இப்பிடி ஆத்திரப்படுறீங்க. நான்.அதையும் கூறிட்டாப் பிறகு நீங்க 'உன் வியாபாரமுமாச்சு, நீயுமாச்சு நாளை முதல் இந்த வீட்டு வாசப்படி ஏறப்படாது. நட வெளியே!'ன்னுசொன்னாலும் சொல்லிடுவிங்க. அப்புறம். அப்புறம் எனக்குத்தானுங்களே ஒரு வாடிக்கை வீடு நஷ்டமாப் போவும்:”