பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை! 435

“அட, சரிதான் சொல்லித் தொலையப்பா! உன்னை விட்டா இங்கே வேறே காய்கறிக்காரன் எவன் வரப்போறான்?”

“சரிங்க. சொல்றேன், என் மேலே கோவப்படாதீங்க என் கருத்து உங்களுக்குப் பிடிக்கலேன்னா அதுமேலே கோவப்படாதீங்க. படிச்சவங்ககிட்டே இதுதான் இன்னைக்கு இல்லாத குணமுங்க. கருத்து மேலே ஆத்திரப்படாம, அதைச் சொன்னவன் மேலேயே கோபப்படுறீகளே?”

“சரியாப் போச்சு! நீ எங்கேயோ வேறே பேச்சைத் தொடங்கிட்டியே? நான் கேட்டதற்குப் பதில் சொல்லப்பா!'

"ஹைஸ்கூலிலேயும் காலேஜிலேயுமாகப் பதினேழு வருஷம் ஆயிரக்கணக்கிலே செலவழிச்சு ஒரு வழியாப் படிப்பை முடிச்சுப் பட்டம் வாங்கினிங்க இப்போ என்ன செய்யறீங்க? புரொபஸ்ராயிருக்கீங்க, தற்சமயம் ஐந்நூத்துக்கு மேலே சம்பளம் வாங்குறிங்க எண்ணூறு வரை உயரும்னு நம்பிக்கிட்டிருக்கீங்க இல்லீங்களா? நீங்க சம்பளம் கட்டி ஒரு காலேஜிலே படித்துப் பட்டதை வாங்கின பிறகு, இப்போ சம்பளத்தை வாங்கிட்டுப் படிப்பைச் சொல்லிக் கொடுக்கிறீங்க. இதுவும் ஒரு வகை 'வியாபாரம்'தானுங்களே?”

"ம்...!"

“சரி; இதை விட்டுடுங்க. வக்கீல்களைத்தான் பாருங்களேன். நீதியை விற்றுப் பிழைக்க வேண்டியிருக்குது. டாக்டர்கள் படித்த கலையினாலே மருந்தையும் திறமையையும் விற்றுப் பிழைக்க வேண்டியிருக்குது. உலகத்திலே பார்க்கப் போனா மனுசன் வாழுகிறதே ஒரு வியாபாரம்தானுங்க. நீங்க படிக்காத தத்துவத்தை நான் எங்கேருந்து சொல்லப்போறேனுங்க? என்ன வித்தியாசம்னா, நாங்க தெருவிலே வந்து கூவி விற்க வேண்டியிருக்குது. வக்கீலும், டாக்டரும், புரொபஸரும் தெருவிலே வந்து கூவாமலே, அதை நாகரிகமா, கெளரவமர் விற்கிறாங்க!”

"ம்!"

என்னிடம் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.

"அடேடே. ஏதேதோ பேசி உங்க மனசைப் புண்படுத்திட்டேனுங்க.இந்த எளவுப் பேச்சு வெறி வந்திருச்சின்னா எனக்குத் தலைகால் புரியறதில்லிங்க. இந்தப் பழக்கத்துலேருந்து விடுபடவும் முடியறது இல்லை. நான் வரட்டுமுங்களா? நாளைக்குக் காசு வாங்கிக்கிறேனுங்க நான் எதினாச்சியும் எசகுபிசகா உளறியிருந்தா மன்னிச்சிருங்க. உங்க சுப்பையாதானே?”அவன் குரல் குழைந்து இருந்தது.

"சரி, சுப்பையா!'

அவன் கூடையை எடுத்துக்கொண்டு அடுத்த வீட்டு வாசலை நோக்கி நடந்தான். அவன் செல்லும் திசையையே நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.ஏ. படித்து புரொபஸராயிருக்கும் எனக்கு விளங்காத 'தத்துவத்தை' இந்தக் காய்கறிக்காரன் எவ்வளவு சுலபமாக விளக்கிவிட்டான்!