பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

'வாழ்க்கை அப்படியே ஒரு வியாபாரம்' என்பது உண்மைதான்! சுப்பையாவுக்கு விளங்கிய இந்த அற்புதமான தத்துவமெய், தத்துவம் படித்த எனக்கு ஏன் விளங்கவில்லை?

"இரு வேறு உலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு!"

இந்தத் திருக்குறள்தான் அதற்கு விடை சொல்லவேண்டும். நான் பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்திருந்தேன். தொலைவில் எங்கிருந்தோ, “காய்கறீ! காய்கறீ! வாழைக்காய்! கத்தரிக்காய்!” என்று ஒலி சன்னமாக என் செவிகளில் விழுந்தது. சற்றுமுன் என்னிடம் பேசிவிட்டுச் சென்ற சுப்பையாவின் குரல்தான் அது.

காற்றில் மிதந்து வந்த அந்த மெல்லிய ஒலி, “நாங்கள் தலையிற் சுமந்த கால்கள் தேயத் தெருவில் நடந்து கூவி விற்கிறோம். ஆனால் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழும் டாக்டர்கள், வக்கீல்கள், புரொபஸர்கள் என்று வரிசையாக இருக்கும் நீங்களோ..?” என்று எதிரொலி பரப்பி என் செவிகளில் எதையோ கேட்பது போலிருந்தது.

“விற்றுப் பிழைப்பதுதான் வாழ்க்கை - இங்கு
விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை;
கற்றுப் படித்தது ஏன்? வாழ்க்கை - என்றும்
விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை!"

என் மனம் இப்படி நினைத்தது; வாய் முணுமுணுத்தது.

(1960)