பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஒரு மதிப்பீடு 439

சாருக்கும் ஒரு காபி கொண்டா” என்று உள்ளே திரும்பித் தவசிப்பிள்ளைக்கு உத்தரவு கொடுத்துவிட்டு, “உட்காருங்க சார்.” என்று டியூஷன் வாத்தியாரை உபசரித்தார் பொன்னம்பலம். ஆனால் நரசிம்மன் என்ற அந்தச் சுந்தர இளைஞனோ, இப்போதும் அவரை ஏமாற்றிவிட்டான்.

“மன்னிக்கணும் எனக்குக் காப்பி குடிக்கிற பழக்கம் இல்லை” என்று கத்திரித்தாற் போலச் சொல்லிவிட்டு நேரே டியூஷனுக்குக் காத்துக் கொண்டிருந்த பையனை நோக்கிப் போய்விட்டான்.

பொன்னம்பலம் அவர்களுக்கு முகத்தில் அறைந்தாற்போலிருந்தது. இலட்சாதிபதி, பங்களாவாசி, பெரிதாக நாலைந்து கார் வைத்துக் கொண்டிருப்பவர் என்ற காரணங்களுக்காக எல்லாம் மதிக்காமல் தொலைந்தாலும் தொலையட்டும், மாதம் முதல் தேதி பிறந்தால் சுளையாக நூறு ரூபாய் சம்பளம் எண்ணிக் கொடுக்கப் போகிறவர் என்பதற்காகவாவது இவன் நம்மை மதிக்க வேண்டாமோ? உலகத்தின் சுகங்களையும், செல்வாக்கையும், முழுமையாக அநுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவு கோலால் அளந்து பார்த்து மதிக்கிறான் என்பதை அவராலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. ‘எப்படி வேண்டுமானாலும் மதித்துத் தொலைத்துவிட்டுப் போகட்டும். நமக்கென்ன வந்தது? மகனுக்கு ஒழுங்காக "டியூஷன்' சொல்லிக் கொடுத்தால் சரிதான்!” என்று விட்டுவிடவும் அவரால் முடியவில்லை. தாழ்வு மனப்பான்மை என்று மட்டும் சொல்வதா? அல்லது நரசிம்மனிடம் இருந்த கவர்ச்சிதான் காரணம் என்று சொல்வதா? மொத்தத்தில் அந்த டியூஷன் வாத்தியார் தன்னை எதற்காகவோ அலட்சியம் செய்வதுபோல் உணர்ந்து உள்ளுக்குள்ளேயே வேதனைப்பட்டார் பொன்னம்பலம். இது ஒர் அந்தரங்கமான தாழ்வு மனப்பான்மை. இந்தவிதமான தாழ்வு மனப்பான்மையைப் பணத்தினாலும் செல்வாக்கினாலும்கூடப் போக்கிக் கொண்டுவிட முடியாது.

காபி டம்ளரை மேஜை மேலே அழுத்தி ஓசை எழும்படி வைத்துவிட்டு வேகமாக எழுந்து நடந்து போய்த் தோட்டத்தில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்கார முனியனை மடக்கினார் பொன்னம்பலம்.

“ஏண்டா முனியா...! நீ தோட்டக்காரனா இலட்சணமா இருக்கமாட்டே போலிருக்கே?... போறபோதும், வரபோதும், டியூஷன் வாத்தியாரோடே உனக்கென்னடா பேச்சு?.”

“நா ஒண்னும் பேசறதில்லீங்க. அவரா வந்து ஆசையோட விசாரிக்கிறாரு. பூவுங்க. செடிங்க. இதுகளைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதிலே ரொம்ப ஆசையா இருக்காரு.... முந்தாநாள்கூட ரெண்டு பிச்சிப்பூக் குடுன்னு கேட்டு வாங்கிச் சட்டைப் பையிலே போட்டுக்கிட்டாருங்க”....

அவருக்கு அந்தத் தோட்டக்காரன் மேலே பொறாமையாயிருந்தது. தன்னோடு பேசுவதற்கே விரும்பாததுபோல் முகத்தைக் குனிந்து கொண்டு போய்விடுகிற அந்த டியூஷன் வாத்தியார் தோட்டக்காரனிடம் போய்ச்சிரித்துப் பேசுவதும், பூக்களையும்,