பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

செடிகளையும் பற்றி விசாரிப்பதும் தெரிந்தபோது, மிகவும் வேதனையாயிருந்தது. இந்த வாத்தியார் என்னிடமும் சிரித்துப் பேசினால் என்ன? ஒருவேளை என்னிடம் பேசுவதற்கே பயப்படுகிறானோ என்றும் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் நிதானமாக அவன் வந்ததிலிருந்து நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தபோது அவன் பயப்படுகிற ஆளாகவும் தெரியவில்லை. ஆள் நடந்து வருகிற தினுசையும், நிமிர்ந்து நின்று பதில் சொல்லுகிற விதத்தையும் பார்த்தால் ரொம்பப் பெரிய மானஸ்தனாகத் தோன்றியது.இப்படி மானம் உள்ள மனிதர்களைச் சந்திக்கும்போது கோழைகளுக்கும் பக்தி ஏற்பட்டுவிடுகிறது. 'இப்படிப்பட்ட மானம் உள்ளவர்கள்தான் உலகத்தின் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!' என்று ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு பொன்மொழி படித்ததை நினைத்துக் கொண்டார் பொன்னம்பலம்.

இது நடந்து சில வாரத்துக்கு அப்புறம் அவர் ஒருநாள் இரவு வெள்ளைக்கார பாணியில் நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் ஏதோ விருந்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தபோது சாலை ஒரமாக அந்த வாத்தியார் எங்கோ போய்விட்டு நடந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

காரை நிறுத்தும்படி டிரைவரிடம் சொல்லிவிட்டு "மிஸ்டர் நரசிம்மன். உங்களைத்தானே? ஏறிக்குங்க. வீட்டிலே கொண்டு போய் விட்டுடறேன்” என்று அவர் முகம் மலர்ந்து கூறியபோது, "பரவாயில்லே!. இந்த வயசிலேயே எங்களையெல்லாம் சோம்பேறி ஆக்கிடாதீங்க. நடக்கறதிலே ஒரு சுகம் இருக்கே” என்று ரொம்ப அசுவாரஸ்யமாக இந்த உலகத்தையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் சிரிப்பதுபோல் சிரித்துக் கொண்டு பதில் சொன்னான் நரசிம்மன். இப்போதும் அவர் முகத்தில் ஒர் அறை விழுந்தது போலாயிற்று.

அடுத்த கணத்தில் அவருடைய மனத்தில்,"இவன் ஏன் நம்மை இலட்சியம் செய்து மதிக்க மாட்டேனென்கிறான்?’ என்ற ஏக்கத்தை இன்னும் ஒரு படி பெருக்கிவிட்டு விட்டுச் சாலை முழுவதையுமே தனக்கென்று பட்டா எழுதி வாங்கிக் கொண்டவன் போல நரசிம்மன் வீசி நடக்கத் தொடங்கிவிட்டான். இப்போதும் பொன்னம்பலம் ஏழையாகித் தவித்தார். அதே கேள்வி, மிகவும் அந்தரங்கமான அந்தப் பழைய கேள்வி. அவர் மனத்தில் அந்த மனத்தின் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு விசுவரூபமெடுத்து நின்றது.

'உலகத்தின் சுகங்களையும் செல்வாக்கையும் முழுமையாக அநுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவுகோலால் அளந்து பார்த்து மதிக்கிறான்?'

இது அவர் படவேண்டிய கவலை இல்லையானாலும், இந்தக் கவலையைத் தவிர வேறு எதுவும் இப்போது அவருடைய மனத்தில் இல்லை. மறுநாள் காலையில்