பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அரை மணி நேரம் 447

காகிதங்களோடும் உள்ளே நுழைய முயன்ற ஹெட்கிளார்க் குருமூர்த்தியைப் பழநி தடுத்து நிறுத்தினான்.

“இப்போ ஐயாவைப் பார்க்க முடியாதுங்க. அரைமணி நேரங் கழிச்சு வாங்க.”

ஹெட்கிளார்க் திரும்பிப் போனார்.

வாயிலில் கார் வந்து நின்றது. கம்பெனி 'பார்ட்னர்' ஒருவர் வந்து இறங்கினார்.

“விஸிட்டர் ரூமிலே இருங்க. ஐயாவைப் பார்க்க அரைமணி ஆகும்” என்று சொல்லி அவரை விஸிட்டர் ரூமில் கொண்டு போய் உட்கார வைத்தான் பழநி,

வீட்டிலிருந்து முதலாளியின் மனைவி டெலிபோன் செய்து கூப்பிடுவதாக 'டெலிபோன் ஆபரேட்டர்' வந்து கூறினான். "அரைமணி நேரம் கழித்துக் கூப்பிடச் சொல்லி அப்புறம் ஐயா ரூமிலே இருக்கிற போனுக்குப் போடுங்க" என்று சொல்லி அவனை அனுப்பினான் பழநி, ஒரு பெரிய 'லெட்ஜரைத்' தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்த 'காஷியரையும் ‘பைல்'களோடு வந்த "அக்கெளண்டெண்டையும்’ திருப்பி அனுப்பினான் பழநி,

அப்பாடா! ஆபீஸையே ஒரு கலக்குக் கலக்கிவிட்ட அந்த அரைமணி நேரம் ஒருவாறு கழிந்தது.

"பழநி!"

பழநி உள்ளே ஓடினான்.

"இந்தா! இதைக் கொண்டுபோய் வெளியிலே போடு!" ஒரு காகிதத்தில் எதையோ சுருட்டிக் கசக்கி அவன் கையில் கொடுத்தார் முதலாளி.

பழநி அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். தூக்கி எறியுமுன் என்னவோ ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பிரித்துப் பார்த்தான்.

கொடுக்காப்புளித் தோடுகளையும் விதைகளையும் வைத்துச் சுருட்டியிருந்தது காகிதம். பழநிக்கு மயக்கம் போட்டுவிடும் போலிருந்தது. அரைமணி நேரம் உள்ளே நடந்த வேலை இதுதானா? என்று மெல்லச் சிரித்துக்கொண்டான் அவன். பின்பு முதலாளியின் பேட்டிக்குக் காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிவிட்டுக் குப்பைக் கூடையிலிருந்த கொடுக்காப்புளிப் பழங்களை வெளியே எடுத்துத் தைரியமாகத் தன் ஆசனத்திலிருந்தபடியே இரசித்துச் சாப்பிடலானான்.

(1960)