பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஏணி : 43 இளைஞர்கள், படிக்கின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் வேறு கல்லூரி மாணவர்களும் அவரை வரவேற்கக் கூடியிருந்தனர். தன் கல்லூரிப் புரொபஸர்களோடு தானும் ஒருவனாகக் கலந்து கொண்டவன் போல நரசிம்மன் தன்னை வந்து வரவேற்றது ரகுநாதனுக்கு மிக்க ஆச்சரியத்தை அளித்தது. விழா ஆரம்பித்தது. கலெக்டர் நரசிம்மன் பேசினார். ‘அன்பார்ந்த மாணவ இளைஞர்களே! பேராசிரியர்களே! நான் முகஸ்துதிக்காகக் கூறுகிறேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். கல்லூரியிலே பேராசிரியராக இருந்து போதிக்கும் பணியைப் போலப் புனிதமானது வேறு ஒன்றும் இல்லை. அந்தப் புனிதமான பெருந்திருப்பணியில் என் நண்பரும் உங்கள் தமிழ்ப் பேராசிரியருமான ரகுநாதன்.” 'தூ' யாவரும் திரும்பிப் பார்த்தனர். பேராசிரியர் ரகுநாதன் தொண்டைக் கோழையைப் பக்கத்திலிருந்த குரோட்டன்ஸ் செடியின் தொட்டியில் காறித் துப்பிக்கொண்டிருந்தார். அதற்குப் பின், கலெக்டர் நரசிம்மன் தன்னைப் பாராட்டிப்பேசிய எந்தப் புகழுரைகளும் ரகுநாதனுடைய செவிகளில் விழவேயில்லை. 'கலெக்டராகவும் பெரிய பதவிக்காரர்களாகவும் இருப்பவர்கள், சமயத்திற்கு ஏற்றபடி மனத்தை மறைத்து எப்படி எப்படிப் பேசவும் நடிக்கவும் வேண்டியதாக இருக்கின்றது!’ ரகுநாதன் சிந்தனையில் ஆழ்ந்தார். உண்மை அவர் மனத்திற்குள்ளே மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது. அன்றைய விழாவில் ரகுநாதனைப் பாராட்டி மேடைமேல் பேசாதவர்களே பாக்கி இல்லை எனலாம். மாணவர்கள் அவருக்கு மாலைமேல் மாலையாகச் சாற்றி மகிழ்ந்தனர். தமக்கு இருக்கும் செல்வாக்கின் சக்தி இவ்வளவு மகத்தானதா?’ என்று ரகுநாதனுக்கே வியப்பு ஏற்பட்டுவிட்டது. எங்கும் அமைதி சூழ்ந்தது. பாராட்டு விழாவுக்கு மறுமொழியாக நன்றியுரை கூற எழுந்தார், ரகுநாதன். "பிறருக்கு ஏணியாக இருப்பதில்தான் மெய்யான இன்பம் இருக்கிறது போலும்! என் நண்பர், கலெக்டர் நரசிம்மன் அடிக்கடி என்னோடு பேசும்போதெல்லாம் ஆசிரியர் வாழ்வை ஏணியோடு ஒப்பிடுவது வழக்கம். ஆனால், என் அருமை நண்பராகிய அவரும் இன்று ஒர் உண்மையைப் பிரத்தியட்சமாகப் புரிந்து கொண்டிருப்பார். வாழ்க்கையில் தான் தனக்கே ஏணியாக இருப்பதில் தியாகமோ, இன்பமோ இல்லை. பிறருக்கு ஏணியாக இருப்பதிலேதான் அவை உள்ளன. அந்த அரும்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருப்பதாகக் கலெக்டரவர்கள் உங்கள் முன் கூட்டத்திலாவது ஒப்புக் கொண்டாரே, அவருக்கும் உங்களுக்கும் என் நன்றி.” இவ்வளவுதான் பேசினார், ரகுநாதன். அதில் ஒளி நிறைந்திருந்தது. - (1955)