பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60. நினைவில் இருந்து...
1.

“இதோ பாருங்கள்! இன்றைக்கு நீங்கள் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகவில்லையானால்…”

“என்ன செய்து விடுவாயாம்...”

“ஒரு பெரிய புரட்சி நடக்கத்தான் போகிறது...”

“நீ ஒரு புரட்சிக்காரன் தங்கைதானே? அந்த வாசனை போய் விடுமோ?”

ராஜம் பதில் சொல்லவில்லை. உடனே அவள் கண்கள் கலங்கி விட்டன. நான் பேசியதென்னவோ விளையாட்டிற்காகத்தான். ஆனால், சந்தர்ப்பம் என் பேச்சைப் புண்ணில் கோல் விட்டுக் கிளறியது போல மாற்றி அமைத்து விட்டது. என் எதிரே தூணைப் பிடித்துக்கொண்டு நின்றவள், கலங்கிய கண்களோடு மோட்டு வளையை வெறித்துப் பார்த்தாள். அப்படியே அசந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

காகிதத்தில் குத்துவதற்காகக் குண்டுசியை எடுத்துத் தவறுதலாகக் கையில் குத்திக் கொண்டது போலாயிற்று என் நிலை. அவள் என்னோடு இணைய நேர்ந்த அந்தப் பழைய சம்பவம் இப்போதும் அவள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். விளையாட்டாகக் கூறுவதாக எண்ணிக் கொண்டு, அதை நினைவு மூட்டி விட்டது என் தப்புத்தான்!

என்ன செய்யலாம்? வாய் போன போக்கில் விட்டு விட்டால் அப்படித்தான். குப்பையைக் கிளறிய போது பூரானோ, தேளோ கிளம்புகிற மாதிரிச் சில சமயங்களில் பேச்சிலும் நாம் விரும்பாத அபத்தங்கள் வந்து விடுகின்றன.

“ராஜம்! இதென்ன அசட்டுத்தனம்? நான் ஏதோ விளையாட்டுக்குச் சொல்லி விட்டேன் என்றால், அதற்காக இப்படியா அழுவார்கள்? அசடு. திரும்பத் திரும்ப அதை நினைக்காதே. நினைத்தால் துன்பந்தான். மறந்து விடு.”

“...”

“அழாதே பைத்தியம். பகல் ஆட்டத்துக்கே போகலாம், எழுந்திருந்து வா. கண்ணைத் துடைத்துக் கொள்:”

என் சமாதானம் பலிக்கவில்லை. அவள் அந்தப் பழமையின் மோன மூட்டத்தில் சிக்கிச் சோக இருளில் ஒதுங்கி விட்டாள்.