பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அருகிலுள்ள குமிழங்குளம் கிராமத்தில் 'கங்கை கொண்டான்' ரூரல் ஸ்டேஷனைச் சேர்ந்த வேறு ஒரு கான்ஸ்டபிளும் ‘மஃப்டியில்' காத்திருந்தான். அவன் அந்தப் பிராந்தியத்தில் போக வர வழி விவரங்கள் தெரிந்தவனாகையால், எங்களுக்கு உதவி செய்வதற்காக அனுப்பப்பட்டிருந்தான்.

காலை பதினொரு மணி சுமாருக்குக் குமிழங்குளத்திலிருந்து கருவேலங்காட்டிற்குப் புறப்பட்டோம்.

“ஏனப்பா! கருநாகம் அதிகமென்கிறார்களே? பத்திரமான வழியில் கூட்டிக்கொண்டு போ! புற்றும் பொந்துமாக இருக்கிற வழி வேண்டாம்” என்று கங்கை கொண்டானிலிருந்து வந்தவனைப் பார்த்துக் கூறினேன், நான்.

“கருநாகத்துக்குக்கூட அவ்வளவாகப் பயப்படவேண்டியதில்லை சார்! அந்தக் கடம்பூர்ப் புரட்சிக்காரன் எமகாதகப் பேர்வழி! சர்க்கார் கண்ணில் மண்ணைத் தூவுவதில் பலே ஆள் சார் அவனுக்குத்தான் இப்போது நாம் பயப்பட வேண்டும்” என்றான் அவன்.

“அது சரி, அந்தக் கடம்பூர் ஆசாமியைப் பற்றி உனக்கு வேறு விவரங்கள் தெரியுமா? தெரியுமானால், மறைக்காமல் என்னிடம் சொல்லு!”

“தெளிவாகத் தெரியாது சார்! ஆனாலும் இன்னாராகத் தான் இருக்க வேண்டும் என்று என் வரையில் ஒரு அனுமானம் இருக்கிறது.”

"அந்த அனுமானத்தைத்தான் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்

“கடம்பூரில் பழம் பெருமை வாய்ந்த ஒரு பெரிய மிராசுதார் குடும்பம் இருந்தது. நாராயணய்யர் என்று பேர் சொன்னால் தெரியும். மனுஷன் கடைசிக் காலத்தில் குடி, கூத்தி, சீக்கு என்று சொத்தையெல்லாம் பாழாக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்தார். அவர் மனைவியும் பன்னிரண்டு வயதுப் புதல்வன் வேங்கடகிருஷ்ணனும், ஏழு வயதுப் பெண் ராஜம்மாளும் நிராதரவாகப் போயினர். மிச்சம் மீதியை விற்றுக் கடம்பூர் ரயில்வே ஸ்டேஷனருகில் ஒரு பலகாரக் கடை வைத்தாள் அந்த அம்மாள். தாயும் பெண்ணுமாகச் சுடச் சுடப் போளி, வடை, சுண்டல் என்று கண்ணாடிப் பெட்டியை நிரப்பிக் கொடுப்பார்கள். வேங்கடகிருஷ்ணன் ரயில்வே ஸ்டேஷனுக்குள் போய் விற்றுவிட்டு வருவான். ஜீவனம் இந்த வழியில் நடந்துகொண்டிருந்தது.பெண்ணையும் பிள்ளையையும் எப்படியாவது ஆளாக்கி விட்டுவிட வேண்டுமென்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைச் சோதிக்கும் பலகாரக் கடைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாள் விதவைத் தாய்.”

“என்னப்பா, வெடிகுண்டு செய்யும் பேர்வழியைப் பற்றிக் கேட்டால் நீ ஏதோ கதை அளக்கிறாய்?”

“கதை இல்லை சார், அவனைப் பற்றித்தான் சொல்கிறேன். போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.கொஞ்சம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு வாருங்கள்.”

"சரி சொல் பார்ப்போம்”