பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி நினைவில் இருந்து.455

“இந்த வேங்கடகிருஷ்ணனுக்கு வயது ஆக ஆகப் பழக்க தோஷத்தால் சுதேசிப் போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. கடைக்கு அடிக்கடி சாப்பிட வந்து போகும் சில தேசபக்தர்கள், அவன் ஆர்வத்தை இந்த வழியில் திருப்பி விட்டுவிட்டார்கள். நாளடைவில் பெரிய பெரிய தேசபக்தர்களுடன் கூட அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1932-இல் அவனைக் கைது செய்து, இரண்டு மாத காலம் ரிமாண்டில் வைத்திருந்து விட்டுவிட்டோம். கொஞ்ச நாளில் அவன் தாயார் காலமானபின் பலகாரக் கடை நின்று விட்டது. தங்கையை ஒர் உறவினர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு, ஆள் தலைமறைவாக இருக்க ஆரம்பித்தான். பெரிய பெரிய சதி வேலைகளிலெல்லாம் வேங்கட கிருஷ்ணன் முக்கியப் பொறுப்பு வகித்திருக்கிறான்.”

“இந்த வெடிமருந்துச் சதியிலும் அவன்தான் முக்கிய ஆளாக இருந்து வேலை செய்கிறான் என்பது உன் அபிப்பிராயம்; அப்படித்தானே?”

"ஆமாம் சார்! இந்தச் சந்தேகத்துக்கு ஒன்றிரண்டு தடையங்களும் கிடைத்திருக்கின்றன.அந்தப் பையனின் தங்கை ராஜம் இப்போது இங்கே தாழையூத்து அக்கிரகாரத்தில்தான் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இன்னும் கலியாணமாகவில்லை. பதினெட்டு வயது. குதிரை மாதிரி மளமளவென்று வளர்ந்துவிட்டாள். அவன் அடிக்கடி இந்தக் கருவேலங் காட்டிற்குள் சாப்பாடு கொண்டு போய்விட்டு வருவதைக் காண்கிறேன். இதனால் இதெல்லாம் வேங்கடகிருஷ்ணன் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது சார்”

கான்ஸ்டபிள் கூறிய விவரங்களைக் கேட்டதும், என் மனம் வேங்கடகிருஷ்ணனைப் பற்றி சிந்தனைகளில் ஈடுபட்டது. அப்போது மூவரும் கருவேலங்காட்டிற்குள் போகும் ஒற்றையடிப் பாதை மேல்தான் நடந்து கொண்டிருந்தோம்.

“சார் சார்! எங்கே பராக்குப் பார்த்துக்கொண்டே நடக்கிறீர்கள்?. காலடியில் பாம்புப் புற்று சார் வழியைப் பார்த்து நடந்து வாருங்கள். யோசனையை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.”

நல்ல சமயத்தில் அவன் எச்சரித்தான்.நான் ஒரு பாம்புப் புற்றை மிதிக்க இருந்தேன். அவன் குரல் என்னை எச்சரித்து வழிமேல் நடத்தியது.

ஒற்றையடிப்பாதையில் எதிரே ஒரு யுவதிடிபன்ஸெட்டும் கையுமாக வரவே, நான் வழி விலகினேன். நல்ல அழகிதான். அந்த மாதிரித் தோற்றமுள்ள ஒரு பெண் அந்த நேரத்தில் அந்தக் காட்டில் தனியாக வரக் கண்டது எனக்கு வியப்பளித்தது. ஆடம்பரமில்லாத தோற்றமானாலும் அதியற்புதமான செளந்தரியக் கவர்ச்சி அவளிடம் இருந்தது.துவளத்துவள அவள் அந்த நடைநடந்துசெல்லும் காட்சியைத் தணிக்க முடியாத ஆவலோடு மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அவளும், பயமும் மருட்சியும் தோன்றும் கண்களால், என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.