பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 அவள் எங்களைக் கடந்து பத்தடிதான் மேலே சென்றிருப்பாள். “பார்த்தீர்களா, சார்?.இவள்தான். கங்கை கொண்டான் கான்ஸ்டபிள் என் காதருகே மெல்ல முணு முணுத்தான்.

"வேங்கடகிருஷ்ணன் தங்கை ராஜமா?" "அவளேதான் சார்! அந்தப் பயலுக்குச்சோறு கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருகிறாள் போலிருக்கிறது."

“இருந்தாலும் இருக்கலாம். இவளை இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்வோம். மேலே போகலாம்” என்றேன் நான்.

மூவரும் மேலே நடந்து சென்றோம். அந்தப் பெண் ராஜத்தின் உருவமும் அழகும் என் மனத்தில் பதிந்து விட்டன.

கருவேலங்காட்டின் நடுவே ஒரு கீற்றுக் கொட்டகை, சட்டிபானைகள், களிமண், வெடிமருந்துச் சாமான்கள், பிற சாதனங்கள் எல்லாம் குடிசையின் உட்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.ஆனால், குடிசையில்தான் ஆள் ஒருவரும் இல்லை. குடிசை மகா சாமர்த்தியமாக அமைக்கப் பட்டிருந்தது. வெளிப் பார்வைக்கு ஒன்றுமில்லாத வெற்றுக் குடிசையைப் போலத்தான் தோன்றியது. வெளியே மேட்டுப் பாங்காகவும் குடிசையின் உட்புறக் கூடம் இருபதடி ஆழம் தரை மட்டத்திற்குக் கீழேயும் அமைந்திருந்தது. அங்கே தான் வெடி மருந்து தயார் செய்யும் சாமான்களும் சாதனங்களும் வைக்கப்பட்டிருந்தன. மிகக் கொஞ்சநேரத்திற்கு முன்பு யாரோ ஒருவர் சாப்பிட்டுக் கை கழுவியதற்குரிய அடையாளங்கள் குடிசை வாயிலில் இருந்தன.

“என்னப்பா, விஷயத்தைக் கண்டு பிடித்தாகிவிட்டது; ஆள் சிக்கவில்லையே?”

"அவசரப்படாதீர்கள் சார் ஆளும் சிக்கிவிடுவான்; கொஞ்சம் பொறுத்திருந்தால் பிடித்து விடலாம்.”

பொறுத்திருந்தும் பயனில்லை: பகல் இரண்டு மணிவரை ஒருவரும் வரவில்லை. "நீங்கள் இருவரும் இங்கேயே பதுங்கி இருங்கள். நான் ஊருக்குள் போய் உங்களுக்குச் சாப்பாடு அனுப்புகிறேன். வேங்கடகிருஷ்ணன் வந்தால், பிடித்துவிடுங்கள். ஊருக்குள் அவன் தங்கை ராஜம் வேலை செய்கிற வீட்டில் போய் மிரட்டிப் பார்க்கிறேன்.” என்று இரண்டு கான்ஸ்டபிள்களையும் அந்தக் குடிசையிலேயே இருக்கச் செய்துவிட்டு, நான் ஊருக்குள் திரும்பினேன்.

ராஜம் வேலை செய்து கொண்டிருந்த வீட்டுக்கு உரியவரிடம் நான் சி.ஐ.டி என்று கூறியதுமே, வெவெலத்துப் போய்விட்டார் அவர்.

"என்ன் வேண்டும்? எது வேண்டும்? நீங்கள் இங்கே வந்த காரியம் என்ன?” என்று பதறினார் அவர்.

"உங்கள் வீட்டில் கடம்பூர் வேங்கடகிருஷ்ணனின் தங்கை- ராஜம் என்ற பெண் வேலை செய்து வருகிறாளா? இல்லையா?”