பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நினைவில் இருந்து 457

"ஆமாம்! அவளுக்கு என்ன?”

"அவள் அண்ணன் வேங்கடகிருஷ்ணன் தேசீயப் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து, சர்க்காருக்கு எதிராக வேலை செய்கிறான். அதைப் பற்றிய சில செய்திகளை விசாரித்துப் போக வந்திருக்கிறேன் நான்” என்றேன்.

வீட்டுக்காரர் பதறிப் போய், ராஜத்தை என் முன் கொணர்ந்து நிறுத்தினார்.

வேட்டைக்காரனுக்கு முன்னால் மிரண்டு நிற்கின்ற பெண்மானைப் போலக் குனிந்த தலை நிமிராமல் கால் கட்டை விரலால் தரையைக் கீறிக்கொண்டே என் முன் வந்து நின்றாள் அவள் வீட்டுக்குரிய எஜமானர் அவளை எரித்து விடுவது போலப் பார்த்துக்கொண்டு அருகில் நின்றார். என் மனத்தில் கடமையை மீறி ஒரு குறுகுறுப்பு. அந்த வாளிப்பான கட்டழகு, சுழலும் விழிகள், எச்சில் விழுங்கினால் கழுத்திலே தெரியும் என்று சொல்லத்தக்க கண்ணாடிப்பொன் நிறம்: ராஜம் கன்னியாகுமாரி அம்மனின் தெய்வச் சிலைபோல் என் முன் நடுங்கிக்கொண்டு நின்றாள்.

“என்ன சார்? நீங்கள் விசாரிக்க வந்ததை விசாரியுங்கள். உங்களுக்காக நானும் காத்துக் கொண்டு நிற்கிறேன். கழுதையை இன்றோடு தொலைத்துத் தலைமுழுக வேண்டியதுதான். கெளரவமான வீட்டில் வேலைக்காரியைத் தேடிப் போலீஸ்காரன் வந்தால், வீடு உருப்பட்டாப் போலத்தான்” வீட்டுக்காரர் இரைந்தார் . நான் அந்த அழகைப் பருகும் பிரமையிலிருந்து விடுபட்டு, விசாரணையைத் தொடங்கினேன்.

“உங்கள் தமையன் வேங்கடகிருஷ்ணன் இப்போது எங்கே இருக்கிறார்?” “எனக்குத் தெரியாது.”

“பொய் சொன்னால் போலீஸில் சும்மா விடமாட்டோம். தமையனின் இருப்பிடம் உங்களுக்குத் தெரியும். இன்று காலையில்கூட நீங்கள் உங்கள் அண்ணனைச் சந்தித்திருக்கிறீர்கள். வேண்டுமென்றே எங்களிடம் தெரிந்ததை மறைக்கக்கூடாது.”

"நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது.” அந்தப் பெண் கன்னங்கள் ஜிவ்வென்று சிவக்க விசித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அழுகை பீறிக்கொண்டு வந்தது.ஒரு பக்கம் கோபம், இன்னொரு பக்கம் அனுதாபம் இரண்டுடிற்குமிடையில் தவித்தேன் நான். அவள் அழுதுகொண்டே முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு உள்ளே ஒடிவிட்டாள்.

"சார் எதற்கும் இவளை இன்னும் சில நாட்கள் உங்கள் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக் கொண்டிருங்கள். கோபத்தின் பேரில் அவசரப்பட்டுத் துரத்திவிடாதீர்கள். அப்படிச் செய்து விட்டீர்களானால், ஒரு நல்ல உளவாளி தப்பிவிட நேரும். இன்னொரு நாள் சாவகாசமாக வந்து விசாரிக்கிறேன்” என்று வீட்டுக்காரைத் தனியே அழைத்து எச்சரித்துவிட்டுத் திரும்பினேன்.