பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

3

அங்கிருந்து கங்கைகொண்டான் ரூரல் ஸ்டேஷனுக்குப் போய் வேறொரு கான்ஸ்டபிள் மூலம் கருவேலங்காட்டிலிருந்தவர்களுக்கு எடுப்புச் சாப்பாடு அனுப்பினேன். நானும் குளித்துவிட்டுச் சாப்பிட்டேன்.

குட்டி உறக்கம் ஒன்று போட்டுவிட்டு, நாலரை மணிக்கு எழுந்திருந்தேன். நான் எழுந்திருந்தபோது ஸ்டேஷன் வாசலில் ஒரே கூச்சலும் கூப்பாடுமாக இருந்தது.

“வந்தே மாதரம்”

“தியாகி வேங்கடகிருஷ்ணன் வாழ்க’

"அமரன் வேங்கடகிருஷ்ணனுக்கு ஜே!”

ஒன்றும் புரியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டே, தூக்கக் கலக்கத்தோடு ஸ்டேஷன் வாசலுக்குச் சென்றேன். வாசலில் கதர்க் குல்லாய்க்காரர், சாதாரண ஜனங்களுமாக 'ஜே ஜே' என்று இமைக்க முடியாமல் கூடியிருந்தது கூட்டம். நடுவில் ஒரு இரட்டை மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.

சாப்பாடு கொண்டு போனவனைச் சேர்த்து மூன்று கான்ஸ்டபிள்களுமாக வண்டியைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

“என்னப்பா இது? என்ன சமாச்சாரம்? இதென்ன வண்டி? இவர்கள் ஏன் கூச்சல் போடுகிறார்கள்?”

ஒரு கான்ஸ்டபிள் என்னருகே வந்து, நடந்ததை எனக்குக் கூறினான். அவன் மணியாச்சியிலிருந்து என்னுடன் வந்தவன்.

“சார், நீங்கள் அங்கிருந்து வந்தபின், கொஞ்சநேரம் நாங்கள் இரண்டு பேரும் அந்தக் குடிசையிலே உட்கார்ந்திருந்தோம். ஒருவரும் வரவில்லை. எனக்குத் தண்ணிர்த் தாகம் பொறுக்க முடியவில்லை.என்னோடு மஃப்டி'யில் இருந்த கங்கைகொண்டான் ஆளிடம் 'ஏனப்பா பக்கத்திலே கிணறு ஏதாவது இருக்கா என்று கேட்டேன். இதே ஒற்றையடிப் பாதையிலே தெற்கே கால்பர்லாங் போனால் ஒரு இறங்கு கிணறு இருக்கு. போய்க் குடிச்சிட்டு வா’ என்றான் அவன். நான் போனேன். கிணற்றடியிலே ஒரு மனோரஞ்சிதச் செடி புதராகப் படர்ந்து கிடந்தது. அந்தப் புதரின் கீழே ஒரு ஆள் குப்புற விழுந்து கிடந்தான். நான் அருகில் போய் உடம்பைப் புரட்டி மூக்கருகில் கைவைத்துப் பார்த்தேன். மூச்சு இல்லை. உடம்பு நீலம் பாரித்திருந்தது. உடனே தண்ணிர்கூடக் குடிக்காமல் ஓடிவந்து கங்கை கொண்டான்காரனைக் கூட்டிச் சென்று காண்பித்தேன்.

“அடேடே இவன்தானப்பா நாம் தேடிக்கொண்டிருக்கும் வேங்கடகிருஷ்ணன்! இவனை நாம் தேடிக்கொண்டிருக்க, இவன் யமனைத் தேடிக்கொண்டு போய்விட்டானே? சாப்பிட்டுவிட்டுத் தண்ணிர் குடிக்க வந்திருக்கிறான். ஏதோ பாம்பு போட்டுத் தள்ளிவிட்டது.இதோ உடம்பில் விஷம் ஏறி, நீலம் பரவியிருப்பதைப் பார் என்று ஆச்சரியப் பட்டுக் கூவினான். இந்தச் சமயத்தில் நீங்கள் எடுப்புச் சாப்பாடு