பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நினைவில் இருந்து. 459

கொடுத்தனுப்பிய ஆளும் வந்து சேர்ந்தான். மூவருமாகச் சேர்ந்து குமிழங்குளத்திலிருந்து ஒரு வாடகைவண்டி பேசிச் சவத்தை இங்கு கொண்டு வந்துவிட்டோம். வர வழியிலே சமாச்சாரம் பரவி, இந்தக் காந்திக் குல்லாய்க்காரர்களும் கூப்பாடு போட்டுக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டார்கள்.”

"அந்தக் குடிசையிலிருந்த வெடிமருந்துச் சமான்களை என்ன செய்தீர்கள்?"

“அவற்றையும் வண்டியிலேயே கொண்டு வந்துவிட்டோம் சார்”

“ஆல் ரைட்! நீ போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வா. ஏய்! 'கங்கை கொண்டான்!' இந்தக் கூட்டத்தை எல்லாம் கலைத்து அனுப்பு. உனக்கு அந்தப் பெண் வேங்கட கிருஷ்ணனின் தங்கை ராஜம் வேலை செய்கிற வீடு தெரியுமில்லையா? நீ போய் அவளை இங்கே ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு வா” என்று பரபரப்போடு உத்தரவிட்டேன்.

டாக்டர் வந்தார். பரிசோதித்துப் பார்த்தார். 'விஷப்பாம்பு கடித்து மரணம் - என்று மெடிக்கல் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

ராஜத்தைத் தேடிப் போனவன் வெறுங்கையோடு திரும்பி வந்தான். “சார்! மத்தியானம் நீங்க வந்ததுமே அந்தப் பெண்ணை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்களாம், அவள் ரயிலுக்குப் போய்விட்டாளாம். இனிமேல் இந்த ஊர் எல்லைக்குள் அகப்படமாட்டாள் என்று தெரிகிறது சார்” என்றான் வந்தவன்.

‘ரயில்வே ஸ்டேஷனில் இருந்தாலும் இருப்பாள். அங்கேயும் பார்த்துவிட்டு வந்துவிடு!” - அவனை ஸ்டேஷனுக்குத் துரத்தினேன். பிரேதத்தை யாரிடம் ஒப்புவிப்பது? அவள் அகப்படவில்லை என்றால், இலாகா செலவில் அல்லவா தகனம் செய்ய வேண்டியிருக்கும்? என்ன செய்வதென்று புரியாமல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனவனை எதிர் பார்த்துக் காத்திருந்தேன்.

“சார்! அவள் நாலுமணி வண்டியிலேயே போய்விட்டாளாம். ஸ்டேஷன் மாஸ்டரிடம் அடையாளங்களைச் சொல்லி விசாரித்ததில், அவள் மணியாச்சிக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு போனதாகத் தெரிகிறது” என்றான் திரும்பி வந்த ஆள். என் கவனத்திலிருந்து அந்தப் பெண் தப்பிவிட்டதை அறிந்தபோது, இரண்டு விதமான கவலை எனக்கு ஏற்பட்டது. செத்துப்போன தமையனைப் பற்றித் தெரியாமல், அவன் முகம் காணவும் கொடுத்து வைக்காமல் போய் விட்டாளே என்பது ஒன்று. இன்னொன்று.? ஊஹும்.... அது என் கவலை! அதை இப்போது சொல்ல மாட்டேன்!

வேறு ஒருவழியும் தோன்றாமற் போகவே இலாகாவின் பொறுப்பிலேயே கங்கை கொண்டான் மயானத்தில் வேங்கடகிருஷ்ணனின் அந்திமக்கிரியை நடைபெற்றது. சுதேசிப் போராட்டத்தைச் சேர்ந்த இரண்டொருவர் மயானத்திற்கு வந்து மாலைகள் போட அனுமதிகோரினர்.அதை நான் மறுத்து விட்டேன்.கடமை வேறு அனுதாபம் வேறு. நான் என்ன செய்வது?