பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


இது நடந்த பின்பும் நாலைந்து நாட்கள் நானோ என்னோடு மணியாச்சியிலிருந்து வந்திருந்த கான்ஸ்டபிளோ, ஊர் திரும்பவில்லை. இறந்து போன வேங்கடகிருஷ்ணனைத் தவிர அந்த வெடிமருந்துத் தயாரிப்பு வேலையில் சம்பந்தப்பட்டிருந்த வேறு சில பயங்கரவாதிகளைத் தேடி அலைந்தோம். தலைமறைவாக இருந்த அவர்களைக் கண்டுபிடிக்கக் கோவில்பட்டி, கடம்பூர், ஏழாயிரம் பண்ணை என்று ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தோம்.

அரிய முயற்சி செய்து ஒரு வழியாகப் பெரும்பான்மையான ஆட்களைக் கைது செய்துவிட்டோம். ஒரு வாரம் கழித்து மணியாச்சிக்கு வந்தேன். மேலதிகாரியைச் சந்தித்து எல்லா விவரங்களையும் கூறினேன்.அவர் என் சாதனையைப் பாராட்டினார். கூடிய சீக்கிரமே பதவி உயர்வுக்குச் சிபார்சு செய்வதாகவும் கூறினார

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். இரவு பத்து மணிக்கு மேலாகியிருந்தது. என் வரவு அம்மாவுக்குத் தெரியாது. வீட்டில் சாப்பாடு வைத்திருக்கிறார்களோ இல்லையோ? ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் போய்விடலாம் என்றெண்ணினேன். சினிமாக் கொட்டகை வாசலிலிருந்த ஒரு ஹோட்டலில் சாப்பாடு முடிந்தது. வீட்டை நோக்கி நடந்தேன்.

கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அம்மா வந்து கதவைத் திறந்தாள்.

“எப்படா வந்தே? சாப்பிட்டாச்சா?”

"சாயங்காலம் வந்தேன். சாப்பாடு ஹோட்டலில் ஆயிற்று.” பதில் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தவன், எதிரே பார்த்ததும் அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டேன்.

கூடத்து விளக்கொளியின் மங்கலில், வஞ்சிக்கொடிதுவண்டு கிடப்பதுபோல ஒரு இளம் பெண் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஒருக்களித்துப் படுத்திருந்ததனால் முகம் தெரியவில்லை.

"அம்மா.”

“என்னடா?”

“இது யார்? இங்கே படுத்துக் கொண்டிருக்கிறது:”

“அதுவா? நீ உன் படுக்கையை எடுத்திண்டு வாசல் திண்ணைக்கு வா! எல்லா விவரமும் சொல்கிறேன்.”

நான் மெதுவாக நடந்துபோய், என் படுக்கையை எடுத்துக்கொண்டு அம்மா பின்தொடர, வாசல் திண்ணைக்குப் போனேன்.

“யாரம்மா அது?”

“படுக்கையை விரிச்சுக்கோ. சொல்றேன்.”