பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நினைவில் இருந்து. * 461

யாரோ அனாதைப் பொண்ணு. பெரிய குடும்பத்திலே பிறந்து நொடிச்சுப் போனது.இன்னும் கன்னி கழியலே.அண்ணா ஒருத்தன் இருக்கானாம். ஏதோ காந்திக் கட்சியிலே சேர்ந்து ஜெயிலுக்கெல்லாம் போனவனாம்! இவளுக்கு அவனாலே ஒரு உதவியும் கிடையாதாம். நாலு வீட்டில் காரியம் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறதாம் இந்தப் பெண். தாழையூற்றிலே ஒரு பணக்காரர் வீட்டிலே வேலை செஞ்சு சாப்பிட்டிண்டிருந்ததாம். அவா, திடீர்னு வேண்டாம்னு அனுப்பிட்டாளாம். ஒரு வாரத்துக்கு முன்னே ஒரு நாள் ராத்திரி இங்கே வந்து கேட்டுது. எனக்குப் பரிதாபமா இருந்தது. வீட்டுக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என்று இருக்கச் சொல்லிட்டேன். தங்கமான குணம் சொன்ன காரியத்தை.உடனே செய்யறது. வயசு காலம். எனக்கும் தள்ளலை. இருந்திட்டுப் போகட்டும். சம்பளமா, ஒண்ணா? சோறும் துணியும்தானே? ஒரு கன்னிப் பெண்ணைக் காப்பாத்தின புண்ணியமாக இருக்கட்டுமே!.”

அம்மா மூச்சு விடவில்லை. பேசிக்கொண்டே போனாள்.

“பேர் என்னம்மா?”

"ஏன்? ராஜம்’னு சொன்னா”

உள் மனம் குறுகுறுத்தது. வெளி மனம் பரபரத்தது. எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தன.

“என்னடா? பேசாமே உட்கார்ந்துட்டே? உனக்கு இஷ்டமில்லேன்னாப் போகச் சொல்லிடறேன்.”

“இஷ்டமில்லாமே என்னம்மா? உனக்கும் ஒத்தாசைக்கு ஒரு ஆள் வேண்டியதுதானே?”

“சரி அலைஞ்சிட்டு வந்திருக்கே தூங்கு நான் உள்ளே போறேன்.”

அம்மா உள்ளே போனாள்! கதவு தாழிடும் ஒசை! கண்களை மூடினேன். உறக்கம் வரவில்லை. நினைவுகள்! நினைவுகள்! இனிய நினைவுகள். கண்களை மூடி நினைவு மயக்கத்தில் கள்ளத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தேன். .

மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கும். உள் கதவை யாரோ மெல்லத் திறக்கும் ஒசை அரைகுறை உறக்கத்தில் இருந்த என் காதுகளில் விழுந்தது. நான் விழித்துக்கொண்டேன். எழுந்திருக்காமலே கண்களை முடியிருப்பவன்போல் சாய்ந்த நோக்கில் கவனித்தேன்.

கதவு ஒசையின்றி மெல்லத் திறக்கப்பட்டது. அந்தப் பெண் வெளியே வந்தாள். அவள் கையில் துணி மூட்டை போல ஏதோ ஒன்று இருந்தது. விஷயம் எனக்கு அரைகுறையாகப் புரிந்தது.

வாசற் கதவை மெல்லச் சாத்தினாள். படியிறங்கித் தெருவில் விறுவிறு என் நடந்தாள். என் பக்கமாக நாலைந்து விநாடிகள் தயங்கியது அவள் பார்வை. நான்