பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உறங்குவதாக நடித்தேன்.மீண்டும் நடந்தாள். நடையில் தப்பி ஓடுகிற கைதியின் வேகம். அவள் நோக்கம் இப்போது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. "ஏய்! நில்.” திண்ணையிலிருந்து ஒரே தாவாகத் தெருவில் தாவினேன். உள்ளே அம்மா நிம்மதியாகக் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தாள். நான் வருவதைக் கண்டதும் அவளுடைய நடை சாதாரண ஒட்டமாக மாறியது. நானா விடுவேன்? நாலே எட்டில் அவள் தலைச் சடையைப் பிடித்துவிட்டேன்.

“எங்கே போகிறாய்? இந்த நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல்?”

“இது உங்கள் வீடு என்று எனக்குத் தெரியாது.” எங்கோ பார்த்துக் கொண்டு பேசினாள். வார்த்தைகள் தயங்கித் தயங்கி வெளிவந்தன.

“எப்போது தெரிந்து கொண்டாய்”?.

“நான் துங்குவதாக நினைத்துக்கொண்டு, நீங்களும் அம்மாவும் வாசல் திண்ணையில் பேசிக் கொண்டிருந்த போது.”

“இது என் வீடு என்று தெரிந்தால் உனக்கென்ன? நீ ஏன் ஒடவேண்டும்?” .

“நீங்கள் போலீஸ்காரர். எனக்குப் பயமாயிருக்கிறது.”

“போலீஸ்காரர் என்றால் கடித்து விழுங்கிவிடுவேனா உன்னை?”

-----------

"அது சரி: தாழையூற்றிலிருந்து ஏன் ஓடி வந்தாய்”?

“நான் ஒடி வரவில்லை. நீ இனிமேல் இருக்கக் கூடாது; உடனே ஏதாவது வெளியூருக்குப் போய்விடு' என்று அந்த வீட்டுக்காரர் துரத்திவிட்டார்.”

“இப்போதாவது சொல்! நீ வேங்கடகிருஷ்ணன் தங்கை தானே? அவன் எங்கே இருக்கிறான் சொல்?”

அதே பழைய பதில், “எனக்குத் தெரியாது.”

இந்தப் பதிலிலிருந்து வேங்கடகிருஷ்ணன் பாம்பு கடித்து இறந்தது அவளுக்கு இதுவரை தெரியாதென்பதை அறிந்து கொண்டேன்.

“ராஜம் அதிர்ஷ்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்; அசட்டுத்தனமாக இங்கிருந்து ஓடாதே. வா என்னோடு வா. எங்கள் வீட்டில் அம்மாவுக்குப் பின் விளக்கேற்று”

நான் அவள் கையைப் பிடித்தேன். கண்களில் புத்தொளி பரவ அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.அப்படியே அழைத்துக்கொண்டு போய் வீட்டுக்குள் அனுப்பிக் கதவை வெளிப்புறமும் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டேன். சில மாதங்கள் வரை வேங்கடகிருஷ்ணன் மறைவை அவளிடம் கூறுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அது நான் என் சுயநலத்துக்காகச் செய்து கொண்டே சங்கல்பம்.

மறு நாள் பொழுது விடிந்தது. அம்மாவிடம் என் கருத்தைக் கூறினேன்.