பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நினைவில் இருந்து. 463

“நன்றாயிருக்குடா இது? என்ன குலமோ, கோத்திரமோ? ஆள் பார்க்க லட்சணமாக இருந்தால் மட்டும் போதுமா?’'-

“எல்லாம் நம்ம குலந்தான். இந்த ராஜம் இல்லாட்டா இந்தப் பிறவியிலே வேறே கல்யாணம் எனக்கு இல்லை. நான் சொன்னா சொன்னதுதான்.”

“சரி. செஞ்சுக்கோ.!

தை மாதமே திருச்செந்துர் முருகன் சன்னதியில் என் உள்ளங் கவர்ந்தவளை உரியவளாக்கிக் கொண்டேன்.ஆடிமாதம் பூச்சூட்டலின் போது வேங்கடகிருஷ்ணன் இறந்து போன உண்மையைச் சொன்னேன். ராஜம் மூன்று நாள் சாப்பிடவில்லை. என்னுடன் பேசவில்லை. சதா மூலையில் உட்கார்ந்து மெளனமாகக் கண்ணிiர் வடித்துக்கொண்டே இருந்தாள். கடைசியில் காலம்தான் அவள் துயரத்துக்கு மருந்தாயிற்று. அதை மறக்கத் தொடங்கினாள். எதையெல்லாம் மறக்கின்றோமோ, அதையெல்லாம் சீக்கிரமே மீண்டும் நினைக்க நேருவதுதான் மறதியிலுள்ள ஒரே ஒரு தொல்லை!

4

'‘ராஜம்! தெரியாமல் அந்த வார்த்தை வந்துவிட்டதடி புறப்படு; சினிமாவுக்குப் போகலாம்.”

“இல்லை! இன்றைக்கு வேண்டாம். இன்னொரு நாள் பார்க்கலாம்”.

"ஏன்! இன்றைக்கே போக வேண்டுமென்று நீதானே பிடிவாதம் செய்தாய். இப்போது நீயே.?”

“வர முடியாதென்றால் வர முடியாது.”

எனக்கு அவள் ஒரு புதிர்.அவள் என்னுடையவளாகிய அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவிலிருந்து புரட்டும்போதெல்லாம் ஆயிரமாயிரம் சினிமாப் பார்த்து முடிந்தது போலிருந்தது.

(1961-க்கு முன்)