பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61. மடத்தில் நடந்தது

சுவாமி தர்மானந்த சரஸ்வதிக்கு முன், கை கட்டி வாய் பொத்தி மெய் குழைந்து பவ்யமாக நின்றான் வேலைக்காரன் பிரமநாயகம். ‘சுவாமி என்ன கட்டளையிடப் போகிறதோ?’ என்று அறியும் ஆவலில் அவனுடைய உடம்பே ஒரு கேள்விக் குறியாகக் குறுகி நின்றது.

செங்காவி உடையில் அந்த உடையின் நிறத்திலும் பன்மடங்கு சிவப்பாகவும் வளங் குன்றாத மேனிக் கட்டுடனும் காட்சியளித்தார் தர்மானந்த சரஸ்வதி. கீழே புலித்தோல் விரிப்பு, மேலே மின்சார விசிறி. மடத்தில் இடம் பெறுகிறதே என்பதற்காகச் சிவப்பு நிறம் பூசப் பெற்று அந்த மின் விசிறியும், சந்நியாசம் வாங்கிக் கொண்டிருந்தது! அது மட்டுமா? அங்கே மின்சாரத்தை இணைத்த ‘வயர்’ எல்லாம் சிவப்பு நிறம்தான்! சிவப்பு நிற ‘வயர்’தான் கிடைத்ததென்று அப்படி அமைக்கவில்லை. சுவாமிகளே சிவப்பு நிற ‘வயர்’தான் வாங்க வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிச் செய்த திட்டம் அது. அந்த மடத்தில் பிரமநாயகம் என்ற வேலைக்காரப் பயலின் உடம்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் சிவப்புத்தான். தர்மானந்த சரஸ்வதியால் சிவப்பாக்க முடியாதது அது ஒன்றுதான். அதாவது அட்டைக் கரி நிறத்தில் உருகின தார் மாதிரிப் பளபளக்கும் பிரமநாயகத்தின் உடம்பு ஒன்றைத்தான் அவர் சிவப்பாக்க இயலவில்லை.

“அடேய் பிரமநாயகம்.” கீழே குனிந்து விரித்திருந்த வேதாந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சுவாமிகள் வேலைக்காரன் இன்னும் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் குரல் கொடுத்தார்.

“சாமி!” - என்று மேலும் கூனிக் குறுகிக் குழைந்து பவ்யமானான் பிரமநாயகம். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள்; நன்றாகப் பழுத்த பறங்கிப் பழத்தில் கீற்றுக்கள் இடையிடையே குழிந்து மடிந்தாற் போல் வயிற்றுச் சதை மடிப்புக்கள் சரிந்த விலாப்புறத்தில் கையைச் செலுத்தி இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்தார் சுவாமிகள். விபூதிப் பைக்குள் விரல் விட்டுத் துழாவி ஒரு முழுக் கால் ரூபாய்க் காசையும் எடுத்தார். சுவாமிகளின் விபூதிப் பையேதான் அவருடைய மணி பர்ஸும். விபூதியால் கிடைக்கிறதை விபூதியோடு சேர்த்துத்தானே போட்டு வைக்க வேண்டும். அந்தப் பையில் காசு நிறைந்தால் விபூதி குறைந்திருக்கும். காசு குறைந்திருந்தால், மறுபடியும் விபூதி நிறையும். இந்தப் பிரசாத நிறைவு, குறைவுக்குக் காரண காரியம் காசாக இருப்பதில் தப்பு ஒன்றும் இருக்க முடியாது. வெறுங்கையே முழம் போட்டுவிடுமா, என்ன?

“இந்தா அரைச் சேர் பாதாம் பருப்பு வாங்கிக் கொண்டு வா”