பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மடத்தில் நடந்தது 465

பிரமநாயகத்துக்கு முன்னால் பருத்திச் சுளை தெறித்து விழுவதுபோல் வெள்ளிக் காசு வந்து விழுந்தது. வேதாந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தரம் பாதாம் பருப்பில் இரண்டும் சீனாக் கல்கண்டுத் துண்டு ஒன்றும் வாயில் போட்டு மென்று பழக்கம் அவருக்கு பாதாம் பருப்பும், சீனாக் கல்கண்டும் சேர்ந்து கரையும்போது நாவுக்குக் கிடைக்கிற சுகமான ருசி இருக்கிறதே, அந்த ருசிக்கும், வேதாந்தத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறதல்லவா? தோன்றுவது தவறில்லை! ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பந்தமும் இருப்பதற்கு நியாயமில்லை. ருசிகளை வெல்ல வேண்டுமென்றல்லவா வேதாந்தம் சொல்லித் தொலைக்கிறது!

பிரமநாயகம் காசை எடுத்துக் கொண்டு ஓடினான். மடத்துக்கு வெளியே எதிர்ப்புறத்து வீதியில் இருக்கும் மளிகைக் கடைக்குப் போய்ப்பாதாம் பருப்பு வாங்கி வருவதற்காகத்தான்!

பிரமநாயகம், பாவம்! பாதாம் பருப்பு என்ன ருசி என்று கூட அவனுக்குத் தெரியாது. அரைச் சேர் பாதாம் பருப்பு என்று கேட்டுக் காசு கொடுத்துக் கடையில் வாங்குவான். அப்படியே கொடுத்த பொட்டலத்தை மடத்தில் கொண்டு போய்க் கொடுத்துவிடுவான். நடுவழியில் பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டு மென்றோ, ஒன்றிரண்டை மென்று தின்னலாமென்றோ அற்ப நப்பாசை தப்பித் தவறியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. ஆசைகளைக் கடந்துவிடும் வயதுக்கு வந்திருந்தான் அவன். அவன் வாழ்ந்து சலித்துப்போன கட்டை பிரமநாயகம் பெரிய சம்சாரி. ஆணும் பெண்ணுமாக ஏழெட்டுக் குழந்தைகள். நோயாளிபோல் நைந்த மனைவி. கிழட்டுப் பெற்றோர். மடத்தில் அவனுக்குக் கொடுக்கிற சம்பளத்தை அப்படியே வீட்டில் கொண்டு போய்க் கொடுத்தால் எல்லோருக்கம் ஒருவேளைக் கஞ்சியாவது ஒழுங்காகத் தேறும். இப்படிப் பட்ட பஞ்சைப் பாமரனுக்கு நப்பாசைகள் வேறு வைத்துக் கொள்ள முடியுமா? இந்த ஏழ்மையே அவனைத் தர்மானந்த சரஸ்வதியை விடப் பெரிய வேதாந்தியாக்கியிருந்தது. தர்மானந்த சரஸ்வதியின் சங்கதி வேறு.அவர் செளகரியங்களால்,செளகரியங்களுக்காகவே வேதாந்தியானவர். எனவே அவருக்கு ருசிகளும், பசிகளும் இருக்கலாம். பிரமநாயகத்துக்குப் பாதாம் பருப்பின் ருசியை அறியும் ஆசை இருந்தால் ஏழெட்டுக் குழந்தைகளும், மனைவியும் கிழட்டுப் பெற்றோரும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்! -

அதனால் அந்தப் பாமரனுக்கு நாக்குச் செத்துப் போய்ப் பல வருடங்களாயிற்று. சுசிருசிகளில் அவனுக்கு ஆசை விழுவதே கிடையாது. “இந்தா பெரியவரே! பொட்டலத்தை வாங்கிக்க-எங்ங்னே பராக்குப் பார்க்கிறே?" என்று பொட்டலத்தை நீட்டினான் கடைக்காரன். பிரமநாயகம் பாதாம் பருப்புப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு மடத்தை நோக்கி நடந்தான்.

என்னவோ பாதாம் பருப்புச் சாப்பிட்டால் தகதகவென்று உடம்பு பொன் நிறத்துக்கு மின்னும் என்று சுவாமிகள் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததை எப்போதோ பிரமநாயகம் கேட்டிருந்தான். ஆனாலும் அதிலெல்லாம் அவனுக்கு

நா.பா. -3